உலகம்

போரில் குதித்த பிரிட்டன்?.. அரபிக்கடலில் Tomahawk ஏவுகணைகளுடன் போர் கப்பல் நிலைநிறுத்தம்!

எச்.எம்.எஸ் ஆன்சன் இந்த பிரிட்டன் நீர்மூழ்கி போர் கப்பலில் அமெரிக்காவின் டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.

மாலை மலர்

ஈரான் எல்லையில் இருந்து 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரிட்டனின் டியாகோ கார்சியா தீவை குறிவைத்து நேற்று ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.

இந்தத் தீவில் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ராணுவப் படையை நிலைநிறுத்த பிரிட்டன் அனுமதித்திருந்தது.

டியாகோ கார்சியா தீவில் உள்ள ராணுவ தளம், மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் பிராந்தியங்களைக் கண்காணிப்பதில் அமெரிக்காவிற்கு உதவுகிறது.

இந்த தீவு மீதான ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் அரபிக்கடலில் தனது அதிநவீன போர் கப்பலை பிரிட்டன் நிலைநிறுத்தி உள்ளது.

எச்.எம்.எஸ் ஆன்சன் (HMS Anson) என்ற இந்த பிரிட்டன் நீர்மூழ்கி போர் கப்பலில் அமெரிக்காவின் டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.

இது அரபிக்கடலில் இருந்தபடியே ஈரானின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் (Perth) துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், தற்போது வட அரபிக் கடலில் ஈரானுக்கு மிக அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஈரான் மூடி வைத்துள்ள வர்த்தக பக்தையான ஹார்முஸ் ஜலசந்தியை அடுத்த 48 மணிநேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரான் மின் கட்டமைப்புகளை அழிப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்கா, தங்கள் மின் கட்டமைப்பை தாக்கினால் மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப மையங்கள் அழிக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.