சிரியா குண்டுவெடிப்பு 
உலகம்

VIDEO: சிரியாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தங்கியிருந்த ஓட்டல் அருகே இரட்டை குண்டுவெடிப்பு!

இரண்டாவது குண்டு வெடித்தபோது அருகில் நிறுத்தப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ் அருகே பலர் கூடியிருந்தனர்.

சிரியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தலைநகர் டமாஸ்கஸில் தங்கியிருந்த Four Seasons என்ற ஓட்டலின் அருகே இன்று இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

நேற்று இரவு அவர் ஓட்டலில் தங்கியிருந்த நிலையில் இன்று காலை அவர் சிரிய அதிபர் அகமது அல் ஷாஹ்ராவுடன் பேச்சுவார்த்தை நடத்த கிளம்பிச் சென்றார்.

இரட்டை குண்டுவெடிப்பு

இந்நிலையில் ஓட்டல் அருகே இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதி பரபரப்பான சிரிய சுற்றுலாத் துறை மற்றும் தேசிய அருங்காட்சிய கட்டிடங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

அந்த பகுதியில் உள்ள சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் முதல் குண்டும், இரண்டாவது குண்டு அங்கிருந்த குப்பைத் தொட்டியிலும் வெடித்துள்ளது. இரண்டும் நாட்டு வெடிகுண்டுகள் என தெரியவந்துள்ளது.

இதில் முதல் குண்டுவெடிப்பு, மேக்ரான், ஓட்டலை விட்டு கிளம்பிச் சென்ற உடனே நிகழ்ந்துள்ளது. இரண்டாவது வெடிப்பு முதல் வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் தள்ளி நடந்துள்ளது.

இரண்டாவது குண்டு வெடித்தபோது அருகில் நிறுத்தப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ் அருகே பலர் கூடியிருந்தனர்.

இந்த இரட்டை குண்டுவெடிப்பில் 4 காவல்துறையினர் உட்பட 18 பேர் காயாமுற்றனர் என சிரிய உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேக்ரான்

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதும் மேக்ரான் தனது இன்றைய திட்டங்களை ரத்து செய்யப் போவதில்லை என்று பிரான்ஸ் அதிபர் மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2024 இல் பஷர் அல் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு கிளர்ச்சி குழு தலைவர் ஷாஹ்ரா பதவியேற்ற பின்னர் சிரியாவுக்கு வருகை தரும் முதல் ஐரோப்பிய தலைவர் மேக்ரான் ஆவார்.

கஃபே குண்டுவெடிப்பு

முன்னதாக கடந்த வியாழக்கிழமை டமாஸ்கசில் நீதிமன்ற வளாகம் அருகே வக்கீல்கள் கூடும் கஃபேயில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

இதை ஐஎஸ்எஸ் உடன் தொடர்புடைய அமைப்பு மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இன்றைய குண்டுவெடிப்பு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.