உலகம்

ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பணியில் அமர்த்த என்விடியா இயக்குநர் குழுவுக்கு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்

அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறி என்விடியா சிப்கள் சீனாவுக்கு மாற்றப்பட்டனவா என்ற கேள்விகளையும் கிளப்பியுள்ளன.

முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைப் பொறுப்பில் நியமிக்குமாறு என்விடியா நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட டிரம்ப், ஜென்சன் ஹுவாங்கை என்விடியா இயக்குநர் குழு மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என விரும்புவதாகவும், அது நிறுவனத்திற்கும் அமெரிக்காவிற்கும் நன்மை அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். என்விடியா தலைமைப் பொறுப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் டிரம்ப் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து, விவகாரத்தில் அவரது தொடர் தலையீட்டைக் காட்டுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஹுவாங் மன்னிப்புக் கோரி தொழில்நுட்ப நிறுவனத்தில் இரண்டாவது வாய்ப்பைப் பெற வேண்டும் என அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனத் தொடர்பு குற்றச்சாட்டு

திருமணத்தை மீறிய உறவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளியானதைத் தொடர்ந்து, இந்த மாதம் தொடக்கத்தில் ஹுவாங் தனது பதவியிலிருந்து விலகினார். சீன உளவு அமைப்புடன் தொடர்பிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை சந்தேகிக்கும் ஆலிஸ் ஹுவாங் என்ற சீனப் பெண் தொழிலதிபருடனான தொடர்பு குறித்த குற்றச்சாட்டும் இதில் அடங்கும். இந்தக் குற்றச்சாட்டுகள், அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறி என்விடியா சிப்கள் சீனாவுக்கு மாற்றப்பட்டனவா என்ற கேள்விகளையும் கிளப்பியுள்ளன.

ஏற்றுமதி விதிமீறல்

இந்த விவகாரம் அமெரிக்கக் கட்டுப்பாட்டாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்தியப் புலனாய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, நிறுவனத்தின் இணக்க நடைமுறைகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. சந்தேகத்திற்கிடமான சிப் ஏற்றுமதிகள் மற்றும் நிறுவனத்தின் உள் இணக்க வழிமுறைகள் குறித்துத் தெளிவுபடுத்த வேண்டும் என அமெரிக்கக் கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட் வலியுறுத்தியுள்ளார். இந்தப் பரிவர்த்தனைகள் குறித்து யாருக்குத் தெரிந்திருந்தது மற்றும் நிறுவனத்தின் எந்த நிலையில் அவை நடந்தன என்பதைப் புலனாய்வாளர்கள் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு சிப் துறையில் என்விடியாவை முன்னணி நிறுவனமாக உயர்த்திய இணை நிறுவனரான ஹுவாங்கின் தலைமை மற்றும் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் வலுத்து வருகின்றன. எனினும், ஹுவாங்கை மீண்டும் நியமிக்கும் திட்டம் இல்லை என்றும், புதிய தலைமையைத் தேடும் பணியை நிறுவனம் முன்னெடுத்துச் செல்லும் என்றும் இயக்குநர் குழுத் தலைவர் ஹார்வி ஜோன்ஸ் ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஒருபுறம் ஹுவாங் மீண்டும் வர வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தாலும், இயக்குநர் குழுவின் உறுதியான நிலைப்பாடும் தொடரும் விசாரணைகளும் அவர் மீண்டும் பொறுப்பேற்பாரா என்பதில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன.

SCROLL FOR NEXT