அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஈரான் அதிகாரிகளுடன் தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களை இனி வைத்திருக்கப்போவதில்லை என்று ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்குக்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தி வருகிறார்கள். ஈரானின் தற்போதைய தலைமைத்துவத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
நமக்கு அனைத்துப் பிரச்சினைகளையும் ஏற்படுத்திய தலைவர்களிடமிருந்து, தற்போதைய தலைவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்களாக உள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்துள்ளது. அவர்கள் எங்களுக்கு ஒரு பரிசை வழங்கினார்கள். அந்தப் பரிசு இன்று வந்து சேர்ந்தது. அது மிகப்பெரிய மதிப்புள்ள ஒரு மிகப் பெரிய பரிசு.
அது எனக்கு ஒரு விஷயத்தை உணர்த்தியது. அது நாங்கள் ஈரானில் உள்ள சரியான நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
ஈரான் ஏற்குமா?
போரை நிறுத்த அமெரிக்கா தெரிவித்துள்ள 15 அம்ச திட்டத்தை ஈரான் ஏற்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. டிரம்பின் இந்த சமாதான திட்டம் தந்திரமானது என்று ஈரான் நினைக்கிறது.
இதுதொடர்பாக மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளிடம் ஈரான் கூறும்போது, கடந்த கால பேச்சுவார்த்தைகளின்போது டிரம்பால் தாங்கள் 2 முறை ஏமாற்றப்பட்டோம்.
மீண்டும் ஏமாற்றப்பட விரும்பவில்லை என்று தெரிவித்து உள்ளது. மேலும் அமெரிக்காவின் புதிய சமாதான முயற்சிகள் குறித்து மிகுந்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது.