அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஊடக நிறுவனமான 'ஆக்ஸியோஸ்' க்கு அளித்த நேர்காணலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தன்னைச் சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்துப் பேசிய டிரம்ப், தங்களுக்குள் நல்ல நட்பு இருப்பதாகக் கூறினாலும், தங்களில் 'பாஸ்' யார் என்று நேதன்யாகுவுக்கு நன்றாகவே தெரியும் என்று தனது வழக்கமான பாணியில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்து தெரிவிக்க பெஞ்சமின் நேதன்யாகு தொலைபேசியில் அழைத்திருந்தார். அந்த உரையாடலின் போதுதான் இரு தலைவர்களும் விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர்.
டொனால்ட் டிரம்ப் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிரிகளில் துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளதால், இந்தச் சந்திப்பு அடுத்த வாரத்திலோ அல்லது அதற்கு அடுத்த வாரத்திலோ நடைபெறலாம் என இஸ்ரேல் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை சிச்சுவேஷன் ரூமில் இரு தலைவர்களும் சந்தித்த பிறகு, தற்பொழுது நடைபெறவிருக்கும் முதல் நேரில் சந்திப்பு இதுவாகும். அந்த பிப்ரவரி கூட்டத்தில்தான் ஈரானுக்கு எதிரான கூட்டு ராணுவ நடவடிக்கைக்கான திட்டத்தை நேதன்யாகு முன்வைத்தார், அது பின்னர் முழு அளவிலான போராக வெடித்தது.
இந்தச் சந்திப்பு இரு தலைவர்களுக்கும் இடையே கடுமையான பதற்றங்கள் நிலவி வரும் சூழலில் நடப்பது குறிப்பிடத்தக்கது. ஈரானுடன் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த இந்தப் போரை நிறுத்த டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். டிரம்ப் சமீபத்தில் ஈரானுடன் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு புதிய அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளார்.
மேலும், லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு நேதன்யாகுவிற்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். நேதன்யாகுவின் பிடிவாதமான சில ராணுவ முடிவுகளால் ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படுவதாக டிரம்ப் கருதுகிறார்.
கடந்த மாதம் நேதன்யாகுவுடன் நடந்த தொலைபேசி உரையாடலில் டிரம்ப் அவரை கடுமையாக விமர்சித்ததாகவும், டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்கள் பலரும் நேதன்யாகு எடுத்த முடிவுகள் தவறானவை என்று கருதுவதாகவும் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் முன்னாள் தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் முடிவடையும் வரை இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தற்காலிக ஓய்வு கொடுத்துள்ளதாகவும், அதுவரை இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தாது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானியர்கள் பேச்சுவார்த்தைக்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், வரும் அக்டோபர் மாதம் இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போதைய தேர்தல் கருத்துக்கணிப்புகளில் நேதன்யாகு தனது எதிராளிகளை விடப் பின்தங்கியுள்ளார்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புடன் வெள்ளை மாளிகையில் நடக்கும் இந்தச் சந்திப்பு நேதன்யாகுவிற்கு அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.