போர்ட்டர்ஸ் லேக் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள மூன்று முக்கியச் சாலைகளுக்குப் பெயரிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, அங்குள்ளவர்கள் எளிய முறையில் யோசித்து விசித்திரமான பெயர்களைச் சூட்டியுள்ளனர்.
பொதுவாக நகரங்கள் மற்றும் ஊர்களில் உள்ள தெருக்களுக்கு வரலாற்றுச் சின்னங்கள், தியாகிகள், அரசியல் தலைவர்கள் அல்லது ஊரின் சிறப்பைக் குறிக்கும் வகையில் பெயரிடுவது வழக்கம். ஆனால், கனடாவில் உள்ள சில பகுதிகளில் இதற்கு முற்றிலும் மாறாக, எங்கு பார்த்தாலும் விசித்திரமாகவும் நகைச்சுவையாகவும் தெருக்களுக்குப் பெயரிட்டுள்ளனர்.
குறிப்பாக, நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள ஹாலிஃபாக்ட்ஸ் நகருக்கு அருகில் உள்ள 'போர்ட்டர்ஸ் லேக்' பகுதியில் அமைந்துள்ள சில தெருக்களின் பெயர்களைக் கேட்டால் யார் வேண்டுமானாலும் ஒரு நொடி குழம்பிப் போவார்கள்.
போர்ட்டர்ஸ் லேக் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள மூன்று முக்கியச் சாலைகளுக்குப் பெயரிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, அங்குள்ளவர்கள் எளிய முறையில் யோசித்து விசித்திரமான பெயர்களைச் சூட்டியுள்ளனர். அதன்படி அந்தத் தெருக்களுக்கு முறையே 'திஸ் ஸ்ட்ரீட்' 'தட் ஸ்ட்ரீட்' மற்றும் 'தி அதர் ஸ்ட்ரீட் என்று பெயரிடப்பட்டுள்ளது. புதியதாக அந்த பகுதிக்கு செல்லும் வெளி நபர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகள் வழிகேட்கும்போது, "நீங்கள் எந்தத் தெருவில் இருக்கிறீர்கள்?" என்று கேட்டால், "நான் இந்தத் தெருவில் இருக்கிறேன்" என்று அவர்கள் பதிலளிக்கும் சுவாரஸ்யமான குழப்பமான சூழல் அங்கு நிலவுகிறது.
இது போன்ற வித்தியாசமான பெயர்கள் வைக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான காரணமும் கூறப்படுகிறது. அதாவது, வேகமாக வளர்ந்து வரும் நகரமயமாக்கல் மற்றும் புதிய குடியிருப்பு பெருக்கத்தால், அடுத்தடுத்து வரும் தெருக்களுக்கு என்ன பெயரிடுவது என்று தெரியாமல் அதிகாரிகளும் டெவலப்பர்களும் விழிபிதுங்கிப் போவதே வழக்கம். கனடாவின் பிற பகுதிகளிலும் கூட 'ரோடு டூ நௌவேர்' போன்ற விசித்திரமான பெயர்களைக் கொண்ட சாலைகள் உள்ளன. இந்தச் சுவாரஸ்யமான மற்றும் விசித்திரமான தெருப் பெயர்கள் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருவதுடன், இணையவாதிகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.