ஏமன் நாட்டில் சவுதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளிடமிருந்து முக்கிய செங்கடல் துறைமுக நகரமான மொகாவை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஏமனில் தலைநகர் சனா உள்ளிட்ட பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
சவுதி அரேபிய ஆதரவு பெற்ற சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசு தனது கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள உள்ள பகுதிகளை தற்காத்துக்கொள்ள போராடி வருகிறது.
கடந்த வாரம் முதல் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு படைகளுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது.
ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் உலகின் மிக முக்கியமான கடல்வழிப்பாதைகளுள் ஒன்றான பாப் அல் மாண்டெப் ஜலசந்தியை கைப்பற்ற ஹவுதிக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு வசம் இருந்த முக்கிய செங்கடல் துறைமுக நகரமான ஏமனின் மொகா (Mokha) நகரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாகி தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் பாப் அல் மாண்டெப் ஜலசந்தியிலிருந்து வெறும் 75 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஹவுதி படைகள் முன்னேறியுள்ளன.
மொகா நகரைக் கைப்பற்ற நள்ளிரவில் நடந்த கடுமையான தாக்குதல்களால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், யேமன் சர்வதேச அரசின் தலைமையகமான ஏடன் நகரை நோக்கி தப்பிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
மொகா நகரை மட்டுமின்றி, செங்கடலில் உள்ள முக்கியத் தீவான 'ஜுகார்' (Zuqar) தீவையும் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
பதிலடியாக, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தாயிஸ், ஹுதைதா, மாரிப் உள்ளிட்ட பகுதிகளில் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் 64 க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதனிடையே, நேற்று ஹவுதிகள் சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள காமிஸ் முஷைத், அப்ஹா மற்றும் ஜாசான் ஆகிய நகரங்கள் மீது நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைகளை தாக்குதலில் 73 பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் சேதமடைந்துள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் நடந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், சாலைகளில் காயமடைந்தவர்கள் உதவியின்றி கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாகப் பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ளது.
இதனால் சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு செங்கடல் பாதையையே முழுமையாக நம்பியிருந்தது.
சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு தடையில்லை என்று ஹவுதி அமைப்பு கூறினாலும், சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.
இந்த திடீர் மோதல் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனிடையே ஏமன் பகுதிகளைப் பாதுகாக்க அந்நாட்டு அரசு, அரபு மற்றும் சர்வதேச நாடுகளுடன் கோரிக்கை விடுத்துள்ளது.