உலகம்

சவுதிக்கு ஆதரவு... ஹூதி இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் விமானங்கள் - மத்திய கிழக்கு மோதலுக்குள் உள்ளிழுக்கப்படும் இஸ்லாமாபாத்?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முக்கிய மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது.

ஏமனில் உள்ள ஹூதி அமைப்பின் இலக்குகள்மீதான சவுதி அரேபியாவின் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் விமானப்படையின் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் 8000 பாகிஸ்தான் வீரர்கள் சவுதி அரேபியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினர் சமீப நாட்களில் தாக்குதலை அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

ஆனால் பாகிஸ்தான் அமைச்சகம் இந்த தகவலை மறுத்துள்ளது. இந்த செய்தி போலியானது மற்றும் புனையப்பட்டது என தெரிவித்துள்ளது.

வான்வழித் தாக்குதல்

பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்கள் ஏமனில் உள்ள ஹூதி இலக்குகளைத் தாக்கியுள்ளதாக மூத்த ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், ஈரானுடனான உறவால் ஏமனுக்குள் பாகிஸ்தான் தரைவழித் தாக்குதல்கள் எதையும் நடத்தாது என்றும், இது சவுதிக்கான வான்வழி ஆதரவு மட்டுமே என்றும் பாகிஸ்தானில் முன்னாள் அமெரிக்க இராணுவத் தூதராகவும், பாதுகாப்பு உளவுத்துறையின் முன்னாள் மூத்த ஆய்வாளராகவும் இருந்த அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளர் கர்னல் டேவிட் ஓ ஸ்மித் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவிற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பது ஏன்?

சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி இந்த உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

அந்த வகையில் தற்போது சவுதிக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு வழங்க முன்வந்துள்ளது.

மத்திய கிழக்கு மோதலுக்குள் இழுக்கப்படும் பாகிஸ்தான் ?

மத்திய கிழக்குப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முக்கிய மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவுக்கான இந்த ஆதரவு மத்திய கிழக்கு மோதல்களுக்குள் பாகிஸ்தானை உள்ளிழுத்து விடுவதாக அமையும்.

அதனால்தான் ஏமன் போரில் நேரடித் தலையீட்டைத் தவிர்த்து, அரேபியாவுடனான உறவையும் பேண முயன்று வருகிறது. இருப்பினும் மோதல் தீவிரமடைந்தால் பாகிஸ்தானுக்கு இது உள்நாட்டிலும், ஈரான் உடனான உறவிலும் பல்வேறு அரசியல் மற்றும் பாதுகாப்பு நெரிசல்களை ஏற்படுத்தலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT