பாகிஸ்தானில் கோஹாட் லைன்ஸ் பகுதியில் பொதுமக்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்த மசூதியில், தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வோ மாகாணத்தில், பழைய காவல்துறை வளாகத்திற்கு அருகே ஒரு மசூதி உள்ளது.
இந்த மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டு, மசூதி முழுவதுமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நபர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து தாக்குதல் சம்பவம் குறித்து மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் தாஹிர் அலி ஷா கூறுகையில், காயமடைந்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் இதுவரையில் 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில், குறிப்பாக கைபர் பக்துன்க்வாவில், பயங்கரவாதிகளின் வன்முறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
அந்த பகுதியில் பாதுகாப்புப் படைகளும் காவல்துறையினரும் அதிகளவில் பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பான புகலிடங்களைப் பயன்படுத்தி, பயங்கரவாதிகளுக்கு தாக்குதல் பயிற்சிகளை அளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் நிலவும் தீவிரவாதத்தை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்றும் குறிப்பிட்டுள்ளது.