ஆட்சியமைக்க தனது எதிராளியான ஐசென்கோட் உடன் நேதன்யாகு கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நடையப்பெற்று முடிந்தது. 121 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 61 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும்.
நேதன்யாகுவின் லிகுத் கூட்டணி 53 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. காடி ஐசென்கோட் உடைய எதிர்கூட்டணி 48 இடங்களை பெற்றுள்ளது. அரபு கட்சிகள் 19 இடங்களை பெற்றுள்ளது.
அரபு கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே இரு அணிகளில் யாரேனும் ஒருவர் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் எழுந்துள்ளது.
இஸ்ரேல் மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் பாலஸ்தீன வழிவந்த அராபியர்கள் ஆவர். ஆனால் அவர்களின் ஆதரவில் ஆட்சி அமைப்பது என்பது இஸ்ரேலின் யூத பெரும்பான்மையினருக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதால் இரு கூட்டணிகளும் அவற்றின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தயங்குகின்றன.
ஆனால் நேதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்ற ஐசென்கோட் கூட்டணிக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக 19 இடங்களை வைத்துள்ள அரபு கட்சிகள் அறிவித்துள்ளன.
இதற்கெல்லாம் மத்தியில், தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள நேதன்யாகு காடி ஐசன்கோட்டுடன் கைகோர்க்கக்கூடும் என்று இஸ்ரேலிய ஊடகமான i24 நியூஸ் கூறியுள்ளது.
தகவல்களின்படி, எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட், அரபு தலைமையிலான கட்சிகள் மற்றும் தீவிர பழமைவாத யூதக் குழுக்களுடன் ஒரு புதிய அரசாங்கக் கூட்டணியை அமைக்கக்கூடும் என்று நேதன்யாகு அஞ்சுகிறார்.
எனவே நேதன்யாகு தான் தற்போது தனது அரசியல் போட்டியாளரான ஐசென்கோட்டுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பைத் திறந்து வைத்துள்ளார் என கூறப்படுகிறது.
அரபு கட்சிகளுடன் கைகோர்ப்பது "தேசிய நலனுக்கு எதிரானது" என்று ஐசென்கோட்டை நேதன்யாகு எச்சரித்துள்ளார்.
ஐசென்கோட்டின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் அரபு கட்சிகளுடனான எந்தவொரு உடன்படிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில், யூத மற்றும் அரபு தலைவர்களின் கூட்டு கூட்டணியை அமைக்கக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.
தோல்வியால் மனமுடைந்த நெதன்யாகுவும் அவரது லிகுத் கட்சியும், தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால் மோசடிக்கு உறுதியான எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. பணத்துடன் இருந்த சில அரசியல் முகவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட், இதுதொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது.
இருப்பினும், இந்தச் சிறிய சம்பவங்கள் இறுதி முடிவுகளையோ அல்லது தேர்தலின் நேர்மையையோ பாதிக்கவில்லை என்று இஸ்ரேல் உச்ச நீதிமன்ற நீதிபதியும் தேர்தல் குழுத் தலைவருமான நோம் சோல்பர்க் தெளிவுபடுத்தியுள்ளார்.
இஸ்ரேலில் அடுத்த அரசாங்கம் உருவாவது இனி ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் முடிவை பொறுத்து அமையும்.
ஹெர்சாக் வரும் புதன்கிழமை அன்று வெற்றி பெற்ற கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவார்.
இந்தச் சந்திப்புகளைத் தொடர்ந்து, அவர் நேதன்யாகு - ஐசென்கோட், இருவரில் யாரேனும் ஒருவரை அரசாங்கம் அமைக்க முறைப்படி அழைப்பார்.
அப்படி அழைக்கப்படுபவர்கள் , நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிலைநாட்ட மற்ற கட்சிகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும்.
கூட்டணி அமைத்து பெரும்பான்மையைப் பெறத் தவறினால், இஸ்ரேல் புதிய தேர்தல்களை நடத்த வேண்டியிருக்கும்.