அமெரிக்காவின் சியாட்டல் நகரில் நடந்த உணவுத் திருவிழாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஐவர் படுகாயமடைந்தனர்.
நேற்று மாலை சியாட்டல் சென்டரில் ஸ்பேஸ் நீடில் பகுதியில் நடந்த வருடாந்திர உணவுத்திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டுயிருந்தனர். மாலை 6 மணியளவில் மர்ம நபர்கள் அங்கு புகுந்து கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் ஐவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஹார்பர்வியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சியாட்டில் தீயணைப்புத்துறை செய்தித்தொடர்பாளர் கிரேஸ் நுனெஸ் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சியாட்டில் நகர மேயர் கேட்டி வில்சன் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தை சுற்றிவளைத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சியாட்டில் நகர் போலீஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்படும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐவரில் 56 வயது பெண்மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் காயமடைந்தவர்களில் 2 வயது சிறுவன், 23 வயது இளைஞர் மற்றும் 29 வயது பெண்மணியின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும், 40 வயது பெண் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடந்ததும் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதங்களில் வெளியாகி உள்ளன. அது, "சுடுகிறார்கள், சுடுகிறார்கள்" என நபர் ஒருவர் கத்துவதும், அதைத் தொடர்ந்து ஆங்காங்கே அமைந்திருந்த உணவுக்கடைகளில் இருந்த மக்கள் பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடுவதும் பதிவாகி உள்ளது.
தப்பிக்கும் முயற்சியில், மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டபடி சென்றதால் பலர் கீழே விழுந்ததும் பதிவாகியுள்ளது.
சியாட்டில் உணவுத் திருவிழா 1982 முதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. வருடாவருடம் 3 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவுக்கு சுமார் 350,000 மக்கள் வருகை தருவர்.
இத்துனை பெரிய திருவிழாவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.