

அமெரிக்காவில் மசூதியின் வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நேரப்படி நேற்று நண்பகல் வேளையில், சான் டியாகோ கவுண்டியின் மிகப்பெரிய மசூதி வளாகத்திற்கு வெளியே 17 மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். பின் அங்கிருந்து தப்பிய இருவரும் பக்கத்து தெருவில் காரை நிறுத்தி தங்களை தாங்களே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தனர்.
இதன் மூலம் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. அதிர்ஷ்டவசமாக மசூதிக்குள் செயல்பட்டு வந்த பள்ளியில் படித்து வந்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரின் உடலை கைப்பற்றினர். பின் பக்கத்து தெருவில் காருக்குள் இறந்து கிடந்த இரு இளைஞர்களின் உடல்களையும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் கைப்பற்றினர்.
மசூதியில் இருந்த பாதுகாப்பு அதிகாரி துணிச்சலாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தனது உயிரை தியாகம் செய்து பலரை காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள், இஸ்லாம் மீதான வெறுப்பினால் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்திய ஒருவன் தனது பெற்றோரின் வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்ததும் இனவெறி சார்ந்த கருத்துக்கள் அடங்கிய தற்கொலைக் குறிப்பை எழுதி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஒன்றில் வெறுப்பை உமிழும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க காவல்துறையிடன் எப்பிஐ இணைந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.