கச்சா எண்ணெய்  
உலகம்

26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலையை குறைத்த சவுதி அரேபியா

தனது ஏற்றுமதியை செங்கடலின் யான்பு துறைமுகத்திற்கு மாற்றியமைத்தது.

26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே மாதத்தில் சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை கணிசமாக குறைத்துள்ளது.

ஈரான் போர் தற்காலிக முடிவை எட்டியுள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டதால் மத்திய கிழக்கில் இருந்து ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சவுதி

ஈரான் போரினால் ஹார்முஸ் பாதையை தவிர்த்துவிட்டு சவுதி தனது ஏற்றுமதியை செங்கடலின் யான்பு துறைமுகத்திற்கு மாற்றியமைத்தது.

தற்போது பதற்றங்கள் தணிந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து மீண்டும் சீரடையத் தொடங்கியுள்ளது.

இதனால் சவுதியின் முக்கிய தளமான ராஸ் தனுராவில் இருந்து ஏற்றுமதி 90 சதவீத அளவுக்கு மீண்டும் நடக்க தொடங்கியுள்ளது.

சந்தையில் கச்சா எண்ணெய் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கியதால், உலகளாவிய அளவுகோலான பிரணட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 72 டாலராகக் குறைந்துள்ளது.

போட்டி

கடல்வழிப் போக்குவரத்து சீரடைந்துள்ளதால் சவுதி அரேபியா, ஈராக், குவைத் போன்ற வளைகுடா நாடுகள் தங்கள் உற்பத்தியை வாரி வழங்கத் தயாராகி வருகின்றன.

உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் அதிகரித்துள்ளதாலும், ஆசிய சந்தையில் நிலவும் கடும் போட்டி காரணமாக சவுதி அரேபியா தனது முதன்மை கச்சா எண்ணெய் விலையை வரலாறு காணாத அளவுக்குக் குறைத்துள்ளது.

ஆசியாவில், குறிப்பாக சீனாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதி தேவை கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்தச் சூழலில் ஆசிய சந்தையில் தனது ஆதிக்கத்தையும் வாடிக்கையாளர்களையும் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், பிற நாடுகளின் போட்டியை எதிர்கொள்வதற்காகவும் சவுதி அரேபியா விலையை குறைத்துள்ளது.

விலக்குறைப்பு

அரசுக்குச் சொந்தமான சவுதி அராம்கோ நிறுவனம், ஆசிய வாடிக்கையாளர்களுக்கான தனது அதிகாரபூர்வ விற்பனை விலையை பிராந்திய அளவுகோலை (Dubai Benchmark) விட 1.50 டாலர் குறைத்துள்ளது.

கடந்த ஜூலை மாத விலையுடன் ஒப்பிடும்போது, இது ஒரே மாதத்தில் பேரலுக்கு 11 டாலர் வீழ்ச்சியாகும்.

இது கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே மாதத்தில் நிகழ்ந்த மாத விலை குறைப்பு என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகஸ்ட் மாத விநியோகத்திற்கு பேரலுக்கு 8 டாலர் வரை மட்டுமே விலை குறைக்கப்படலாம் என்று கணித்திருந்தனர்.

ஆனால், சவுதி அராம்கோ அதனைத் தாண்டி பேரலுக்கு 11 டாலர் என்ற மிகப்பெரிய சரிவை அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு ரஷியாவுக்கு எதிராக சவுதி விலையை உயர்த்திய பிறகு முதல் முறையாக, பிராந்திய அளவுகோலை விடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை இந்தியா மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.