ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெயைச் சுமந்து கொண்டு MV Smirton என்ற சரக்குக் கப்பல் வந்துகொண்டிருந்தது.
ஜூன் 14 அன்று இக்கப்பல் பிரிட்டனின் கடல் எல்லையான ஆங்கில கால்வாயைக் கடக்க முயன்ற போது பிரிட்டன் அதிகாரிகள் கப்பலை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
அப்போது கப்பலின் கேப்டனாக செயல்பட்டு வந்த இந்திய மாலுமியை பிரிட்டன் அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கேப்டன், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியைச் சேர்ந்த அஜய் பந்த் (38) என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
ஜூன் 16 அன்று பிரிட்டனின் சவுதாம்ப்டன் மாகாண நீதிமன்றத்தில் வீடியோ மூலமாக அஜய் பந்த் ஆஜர்படுத்தப்பட்டார்.
சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை மீறி, ரகசியமாக ரஷிய எண்ணெயை வேறு நாட்டிற்குச் கடத்த முயன்றதாக அவர் மீது பிரிட்டன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கேப்டன் அஜய் பந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜேம்ஸ் டைமண்ட் வாதிடுகையில், "கப்பல் எந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும், அதில் என்ன வகையான பொருட்களை ஏற்ற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஒரு கேப்டனுக்குக் கிடையாது.
அவர் வெறும் கார்ப்பரேட் நிறுவனத்தின் உத்தரவுகளைப் பின்பற்றி வேலை செய்யும் ஒரு சாதாரண ஊழியர் மட்டுமே." என குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை போர்ன்மவுத் கிரவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தங்கள் மகனைக் காக்க வேண்டும் என அஜய்யின் பெற்றோர் கோரி வருகின்றனர். உக்ரைன் போர் பின்னணியில் ரஷியா மீது பிரிட்டன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.