உலகம்

ரஷியா மிகப்பெரிய தாக்குதலுக்குத் திட்டம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை!

ரஷியாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைன் விமானப் படையும் தரைப்படைப் பிரிவுகளும் முழு தயார் நிலையில் உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் தரப்பில் ரஷிய தலைநகர் மாஸ்கோவை இலக்காகக் கொண்டு சுமார் 650-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கிய போர் ஆண்டுகள் கடந்தும் தீவிரமாகத் தொடர்கிறது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு அமைதி முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும், களத்தில் மோதல்களின் வீரியம் குறையவில்லை.

கீவ் மீது மீண்டும் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியப் படைகள் இன்று அதிகாலை திடீரென வான்வழித் தாக்குதலைத் நடத்தின. நகரின் பல பகுதிகளில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதில் 2 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ரஷியாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நகரின் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, உளவுத்துறை அறிக்கைகளின்படி ரஷியா உக்ரைன் மீது மேலும் ஒரு மிகப்பெரிய அளவிலான புதிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு வருவதாக எச்சரித்துள்ளார். ரஷியாவின் இந்தத் தீவிரத் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைன் விமானப் படையும் தரைப்படைப் பிரிவுகளும் முழு தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பலப்படுத்தவும், தாக்குதல்களை முறியடிக்கவும் தேவையான கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் தாமதமின்றி தொடர்ந்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாஸ்கோவை நோக்கிய ட்ரோன் தாக்குதல்

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் தரப்பில் ரஷிய தலைநகர் மாஸ்கோவை இலக்காகக் கொண்டு சுமார் 650-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவற்றில் பெரும்பாலானவற்றைத் தங்கள் நாட்டின் வான் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துவிட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் தங்களின் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதால், கிழக்கு ஐரோப்பியப் பகுதியில் போர் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

SCROLL FOR NEXT