உலகம்

Iran war | புரட்சிகர காவலர் கடற்படை தளபதி கொல்லப்பட்டார்: ஈரான்

இஸ்ரேல் தாக்குதலில் புரட்சிகர காவலர் கடற்படை தளபதி அலிரேசா தங்சிரி கொல்லப்பட்டார் என்பதை ஈரான் உறுதி செய்துள்ளளது

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தொடங்கியது. ஈரானின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

புரட்சிக்கர காவலர் படையின் கடற்படை தளபதியாக அலிரேசா தங்சிரி இருந்து வந்தார். இவர்தான் ஹார்முஸ் பகுதியில் உலக கப்பல் செல்வதை தடுக்கும் பணிக்கு முக்கிய காரணமாக இருந்தார். கடற்படைக்கு வியூகம் வகுத்து கொடுப்பதில் சிறந்து விளங்கி வந்தார்.

அலிரிசா தங்சிரியை கொன்று விட்டோம் என்ற கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால், இஸ்ரேல் கூற்றுக்கு ஈரான் பதில் அளிக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் தங்சிரி கொல்லப்பட்டார் என்று ஈரான் இன்று ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும், புரட்சிகர காவலர் படை கூறுகையில் "ஒவ்வொரு வீரரும் தங்சிரிதான். அவர்கள் வரும் நாட்களில், மாதங்களில் ஆச்சரியத்தை கொண்டு வருவதை நாம் பார்க்க இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கு பகுதியில் 530 கி.மீ. தொலைவில் இருக்கும் பெட்ரோகெமிக்கல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானில் உள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.