உலகம்

ரஃபாயல் நடால் ரியல் மாட்ரிட் இயக்குநர் குழுவில் நியமனம்: 99.5% வாக்குகளுடன் பிரம்மாண்ட வெற்றி

இருபது ஆண்டுகளுக்கும் மேலான தனது டென்னிஸ் பயணத்தில் 92 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ள நடால், 22 கிராண்ட் சிலாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார்.

2011-ம் ஆண்டு முதல் ரியல் மாட்ரிட் கழகத்தின் கௌரவ உறுப்பினராக இருந்து வரும் நடால், இந்தப் புதிய பொறுப்பு தனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகவும், அதே சமயம் மிகப்பெரிய பொறுப்பாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபாயல் நடால், பிரபல கால்பந்துக் கழகமான ரியல் மாட்ரிட் அணியின் இயக்குநர் குழு உறுப்பினராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற ரியல் மாட்ரிட் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் நடாலின் நியமனத்திற்கு 99.5 சதவீத வாக்குகள் கிடைத்தன.

மொத்தம் பதிவான 1,713 வாக்குகளில் 1,704 உறுப்பினர்கள் நடாலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். நான்கு பேர் எதிராகவும், ஐந்து பேர் நடுநிலையாகவும் வாக்களித்தனர். ரியல் மாட்ரிட் கழகத்தின் 19-வது இயக்குநர் குழு உறுப்பினராக நடால் பொறுப்பேற்கிறார். முடிவு அறிவிக்கப்பட்டதும், அவையில் இருந்த பிரதிநிதிகள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2011-ம் ஆண்டு முதல் ரியல் மாட்ரிட் கழகத்தின் கௌரவ உறுப்பினராக இருந்து வரும் நடால், இந்தப் புதிய பொறுப்பு தனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகவும், அதே சமயம் மிகப்பெரிய பொறுப்பாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ரியல் மாட்ரிட் கழகம் தலைமுறை தலைமுறையாக மக்களை ஒன்றிணைக்கும் ஒரு மகத்தான அமைப்பு என்று நடால் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தினரும் நண்பர்களும் இணைந்து போட்டிகளைக் காண்பதற்கான பாலமாக இந்தக் கழகம் விளங்குவதாகவும், உலகின் தலைசிறந்த கழகங்களில் ஒன்றாக ரியல் மாட்ரிட் தொடர்ந்து திகழத் தன்னால் இயன்ற பங்களிப்பையும் கற்றலையும் வழங்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஃப்ளோரென்டினோ பெரெஸ் புகழாரம்

ரியல் மாட்ரிட் தலைவர் ஃப்ளோரென்டினோ பெரெஸ், நடாலின் வருகையைக் கழகத்தின் எதிர்காலத்திற்கான முக்கிய அடியாக வரவேற்றுள்ளார். விளையாட்டு வரலாற்றில் நடால் பெற்றுள்ள சாதனைகளையும், மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் கடைப்பிடித்து வரும் கண்ணியத்தையும் பெரெஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். கோப்பைகளையும் சாதனைகளையும் தாண்டி, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அன்பையும் மரியாதையையும் நடால் பெற்றுள்ளதாகவும், ரியல் மாட்ரிட் கழகம் எப்போதும் நடாலின் சொந்த இல்லமாகவே இருக்கும் என்றும் பெரெஸ் தெரிவித்துள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலான தனது டென்னிஸ் பயணத்தில் 92 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ள நடால், 22 கிராண்ட் சிலாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார். அவற்றில் 14 பிரெஞ்ச் ஓபன், நான்கு யுஎஸ் ஓபன், தலா இரண்டு விம்பிள்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்கள் அடங்கும். மேலும், ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், ஸ்பெயின் அணிக்காக ஐந்து டேவிஸ் கோப்பைகளையும் வென்றுள்ளார்.

தொடர் காயங்கள் காரணமாக நவம்பர் 2024-ல் தொழில்முறை டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்ற நடால், தற்போது நிர்வாகத் தளத்தில் ரியல் மாட்ரிட் கழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியில் இணையவுள்ளார். ரியல் மாட்ரிட் கழகம் 2026-2027 நிதியாண்டிற்கு 1.25 பில்லியன் யூரோ வருவாய் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், நடாலின் இந்த நியமனம் கழகத்தின் உலகளாவிய வர்த்தக மற்றும் கௌரவத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT