

அமெரிக்க F-16 போர் விமானத்தை தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது.
அமெரிக்க-ஈரான் போர் இன்னும் முடிந்தபாடில்லை. ஈரான், அமெரிக்கா இரண்டுமே மாறி மாறி மிரட்டல் விடுத்து வருகின்றன.
இதற்கிடையில், அமெரிக்க F-16 போர் விமானத்தை தாக்கியதாகவும், அதனால் அது அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் ஈரான் கூறியுள்ளது. இருப்பினும், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு இந்தக் கூற்றை நிராகரித்துள்ளது.
ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான பிரஸ் டிவியின்படி, ஈரானிய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு பாரசீக வளைகுடாவிற்கு மேலே பறந்த ஒரு அமெரிக்க எப்-16 விமானத்தைக் கண்டறிந்து, அதன் மீது ஏவுகணையை வீசியது.
அந்த ஏவுகணை போர் விமானத்திற்கு அருகில் வெடித்ததில், விமானம் சேதமடைந்ததாகவும், இதனால் விமானி திரும்பி வந்து அருகிலுள்ள விமானத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வளைகுடாப் பகுதியில் ஈரானியப் போர் விமானம் தாக்கப்பட்டதாக எக்ஸ் தளத்தில் பரவிய கூற்றை, அமெரிக்க ராணுவ தலைமையகம் பொய்யானது என நிராகரித்துள்ளது.
மேலும், வளைகுடாப் பகுதியில் இயங்கி வரும் அனைத்து அமெரிக்க ராணுவப் போர் விமானங்களும் பாதுகாப்பாகவும், அவற்றின் எண்ணிக்கை சரியாகவும் உள்ளதாகவும் அது தெரிவித்தது.
இதனிடையே "ஈரான் ஒரு அசுத்தமான குண்டை உருவாக்கி வருவதாக வதந்திகள் உள்ளன. அவர்கள் அவ்வாறு செய்தால், நாங்கள் போர் செய்வோம்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், "ஈரானில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் பேசுவதையெல்லாம் நாங்கள் அறிவோம். அவர்கள் யார், எங்கே இருக்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். நாங்கள் கண்டுபிடிப்போம். நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்" என்று கூறினார்.
அமெரிக்க ஊடக நிறுவனமான சிஎன்என் வெளியிட்ட ஒரு அறிக்கையைத் தொடர்ந்து டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளை அசுத்தக் குண்டுகள் அல்லது இரசாயன ஆயுதங்களைக் கொண்டு கொல்வதற்கான சாத்தியமான திட்டங்களை ஈரான் உருவாக்கி வருவதாக உளவுத்துறை தகவல் குறித்து அறிந்த ஏழு அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக அந்த சிஎன்என் தெரிவித்திருந்தது.