உலகம்

உக்ரைன் போரை முடிக்க பிரதமர் மோடியிடம் நல்ல ஐடியா இருக்கு - ரஷிய அதிபர் புதின்!

"நாம் 'முடிவில்லா போர்' என்ற சூழ்நிலையிலிருந்து 'போரின் முடிவு' என்ற நிலைக்கு நகர வேண்டும் - பிரதமர் மோடி

உக்ரைன் போரை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெகுவாகப் பாராட்டியுள்ளார். போரை நிறுத்த பிரதமர் மோடியிடம் "மிகவும் நல்ல யோசனைகள்" இருப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற சர்வதேச நிபுணர்களின் ‘வால்டாய் ஃபோரம்’ மாநாட்டில் அதிபர் புதின் கலந்து கொண்டு பேசினார். அப்போது உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அணுகுமுறை குறித்து கூறினார்.

பிரதமர் மோடிக்கு பாராட்டு

இதில் அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி, எங்களுக்கிடையே இருக்கும் மிகச் சிறந்த, நட்புரீதியான தனிப்பட்ட உறவுகளையும் தாண்டி, உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் உலகத் தலைவர்களில் ஒருவர்.

உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டில் நீடித்து வரும் நிலையில், இரு தரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளைக் கண்டறிவதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அவரிடம் இதற்கான நல்ல யோசனைகளும் உள்ளன.

இந்த விஷயத்தில், இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அதிக அக்கறை காட்டுகிறது. இதை நேரடியாகக் கூறுவது எனது கடமை. அவரது யோசனைகளுக்காக நாங்கள் இந்தியப் பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று புதின் தனது நன்றியை தெரிவித்தார்.

"இது போருக்கான சகாப்தம் அல்ல" - மோடியின் தொடர் முழக்கம்

கடந்த செப்டம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மட்டுமே உலகளாவிய மோதல்களுக்குத் தீர்வுகாணும் ஒரே வழி என்பதைப் பிரதமர் மோடி புதினிடம் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

போரின் முடிவு

அதற்கு முன்பாக கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டின்போதும், "இது போருக்கான சகாப்தம் அல்ல" என்ற தனது உலகப் புகழ்பெற்ற செய்தியை மோடி மீண்டும் புடினிடம் வலியுறுத்தினார்.

"நாம் 'முடிவில்லா போர்' என்ற சூழ்நிலையிலிருந்து 'போரின் முடிவு' என்ற நிலைக்கு நகர வேண்டும். இந்த போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மனிதகுலத்தின் விருப்பம்" என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் போர் தொடங்கியது முதல், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகிய இருவரிடமும் அமைதிக்கான பேச்சுவார்த்தையின் அவசியத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT