சுலைமான் மன்சூர் 
உலகம்

தூரிகையால் போர் செய்த விடுதலை வீரன்.. புகழ்பெற்ற பாலஸ்தீன ஓவியர் சுலைமான் மன்சூர் மறைவு

ஒரு முதிய பாலஸ்தீனர் தனது முதுகில் ஜெருசலேம் நகரத்தைச் சுமந்து செல்லும் இந்த ஓவியம் புகழ்பெற்றது.

பாலஸ்தீனத்தின் அடையாளத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற புகழ்பெற்ற ஓவியரும் சிற்பியுமான சுலைமான் மன்சூர் காலமானார். அவருக்கு வயது 79.

கிழக்கு ஜெருசலேமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவரது உயிர் பிரிந்தது.

"கடைசி அத்தியாயமும் எழுதப்பட்டுவிட்டது. உலகுக்கு அவர் நினைவுகளையும் அழகையும் விட்டுச் சென்றுள்ளார்" என அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வேட்கையின் ஓவியம்

1947 இல் மேற்கு கரையின் பிர்செய்ட் பகுதியில் பிறந்த சுலைமான் மன்சூர், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனர்களின் பாடுகளையும் எதிர்க் குரலையும் தன் தூரிகையில் தாங்கி, ஓவியங்களாக தீட்டினார்.

1973 இல் அவர் வரைந்த 'ஜமால் அல் மஹாமில்' (Camel of Burdens) என்ற புகழ்பெற்ற ஓவியம், உலகெங்கிலும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறியது.

ஒரு முதிய பாலஸ்தீனர் தனது முதுகில் ஜெருசலேம் நகரத்தைச் சுமந்து செல்லும் இந்த ஓவியம், பாலஸ்தீன மக்களின் இடம்பெயர்வு துயரத்தையும், சொந்த மண்ணுடனான அவர்களின் ஆழமான பிணைப்பையும் பிரதிபலித்தது.

பாரம்பரிய தையல் வேலைப்பாடுகள், ஆலிவ் மரங்கள், ஆரஞ்சு தோட்டங்கள் மற்றும் பாலஸ்தீன கிராமப்புறப் பெண்கள் ஆகியவை இவரது ஓவியங்களில் தொடர்ந்து இடம்பெற்ற முதன்மைப் பொருள்களாகும்.

பாலஸ்தீனக் கொடியின் சிவப்பு, பச்சை, கருப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களை பயன்படுத்துவதற்கு கூடக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலம் இருந்தது. அப்போது குறியீடுகள் மூலம் மக்களின் சுதந்திர தாகத்திற்கு உயிர் கொடுத்தார்.

நியூ விஷன்ஸ் என்ற கலைக் கூட்டமைப்பை தொடங்கிய இவர், இஸ்ரேலின் பொருட்களை புறக்கணித்து உள்நாட்டில் கிடைக்கும் மண், சேறு, மஞ்சள், களிமண் போன்ற இயற்கையானவற்றை பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்தார்.

பேரிழப்பு

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பாக மன்சூரின் ஒவ்வொரு படைப்பும் உலக அரங்கில் விளங்கியது.

தற்போதுவரை தனது தாய்நாட்டிற்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக தன் கலையின் வழியே குரல் கொடுக்க அவர் தவறவில்லை.

சுலைமான் மன்சூரின் மறைவு, பாலஸ்தீனக் கலை வரலாற்றுக்கு ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும்.