கற்காலத்திற்கு திரும்பிய காசா.. இஸ்ரேல் முற்றுகையால் நிம்மதியாக மலம் கழிக்கும் உரிமையையும் இழந்த மக்கள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வசதிகள் இல்லாததால் பெண்கள் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
காசா
காசா
Published on

2023 அக்டோபர் முதல் காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொண்றுகுவித்தது. கடந்த அக்டோபரில் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

அதுமட்டுமின்றி காசாவுக்குள் செல்லும் அத்தியாவசிய பொருட்களை செல்ல விடாமல் எல்லைகளிலேயே சோதனைச் சாவடிகள் அமைத்து இஸ்ரேல் தடுத்து நிறுத்தி வருகிறது.

உணவின்றி காசாவில் மனிதனால் ஏற்படடுத்தப்பட்ட பெரும் பஞ்சம் இஸ்ரேலால் உருவாக்கப்பட்டுள்ளது. பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

மருந்து பொருட்கள் செல்வதும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் சுகாதார நெருக்கடியும் காசாவை பிடித்துள்ளது.

இவற்றின் உச்சமாக காசாவில் கழிப்பறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கழிவறை தட்டுப்பாடு

இஸ்ரேலின் தொடர் முற்றுகை காரணமாக காசாவிற்குள் சுகாதாரப் பொருட்கள் மற்றும் கழிப்பறை உபகரணங்களின் வரத்து கடுமையாகக் குறைந்துள்ளது.

ஒரு சாதாரண கழிப்பறை இருக்கை தற்போது அமெரிக்க மதிப்பில் சுமார் 503 முதல் 671 டாலர் வரை விலை வைத்து விற்கப்படுகிறது.

அதிக விலை காரணமாக சாதாரண மக்களுக்கு கழிப்பறை இருக்கைகள் எட்டாக்கனியாக மாறியுள்ளது.

இதனால் முகாம்களில் ஒரு வினோதமான கழிவறை முறை பின்பற்றப்படுகிறது.

கழிவறை

நிலத்தில் ஆழமான ஒரு குழி தோண்டப்படுகிறது.

ஒரு சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியின் நடுவில் துளையிட்டு, அதைத் தோண்டப்பட்ட குழியின் மேல்பகுதியில் வைக்கின்றனர்.

குழியின் அடிப்பகுதியிலும் ஓரங்களிலும் மெல்லிய அடுக்காக மணல் பரப்பப்படுகிறது.

திரவக் கழிவுகள் மணல் வழியாக உறிஞ்சப்பட்டு பூமிக்கு அடியில் செல்லும். திடக் கழிவுகள் குழியின் அடியில் தங்கும். மணல் ஒரு இயற்கை வடிகட்டியாகச் செயல்பட்டு துர்நாற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

சுவர்களோ அல்லது முறையான கதவுகளோ இல்லாததால், நாற்காலியை சுற்றித் தற்காலிக மறைப்புகளை ஏற்படுத்தி, கதவுக்குப் பதிலாக ஒரு சாதாரண துணியைத் தொங்கவிட்டுள்ளனர்.

இது கிட்டத்தட்ட கற்காலத்தில் மக்கள் பயன்படுத்தும் அளவு பழைய முறை ஆகும்.

இதுபோன்று முகாம்களில் 20 முதல் 25 பேருக்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. மேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வசதிகள் இல்லாததால் பெண்கள் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஈமானின் வேதனை

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது கணவர் மற்றும் 11 வயதிற்குட்பட்ட 5 குழந்தைகளுடன் 33 வயதான ஈமான் மஹ்மூத் ஷாமியா பலமுறை வாழிடங்களை இழந்து, இறுதியாக முகாம் ஒன்றில் தற்காலிக அமைக்கப்பட்ட கூடாரத்தில் வசித்து வருகிறார்.

முகாமில் உள்ள அடிப்படை வசதியற்ற தற்காலிகக் கழிப்பறையைப் பயன்படுத்துவது பெரும் வேதனையளிப்பதாக அவர் கூறுகிறார்.

நோய்கள் பரவும் அபாயம்

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காசாவில் உள்ள மக்களில் பாதி பேருக்கு மட்டுமே அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்கின்றன.

காசாவில் கூடாரங்களில் தங்கியுள்ள மக்களில் 60% பேர், அவர்கள் வாழும் இடத்திலிருந்து வெறும் 10 மீட்டர் சுற்றளவிற்குள்ளேயே திறந்தவெளி மனிதக் கழிவுகளுடனும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீருடனும் வாழக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.

காசாவுக்குள் தேவையான பொருட்களை கொண்டு செல்லும் தங்கள் முயற்சிகள்அனைத்தையும் இஸ்ரேலிய எல்லைச் சாவடிகள் தொடர்ந்து தடுத்து நிறுத்துவதாக வர்த்தக சபை சாடியுள்ளது.

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் யுனிசெப் உடனடியாகத் தலையிட்டு காசா மக்களுக்கு இலவசமாகக் கழிப்பறை உபகரணங்களை விநியோகிக்க வேண்டும் என்பதே பாலஸ்தீனியர்களின் கோரிக்கையாக உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com