கடந்த 4 ஆம் தேதி கைபர் மாவட்டத்தின் ஜம்ருத் பகுதியில் சப்ரி என்ற இடத்தை ஒட்டிய பகுதியில் போலியோ தடுப்பூசி முகாமை மேற்பார்வை செய்து வந்த ஜலில் கான் என்ற அதிகாரியும் கடத்தப்பட்டார்.
வடமேற்கு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் போலியோ தடுப்பூசி முகாமின் போது, ஆயுதம் தாந்திய கும்பலால் மூன்று சுகாதாரப் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலியோ நோயை முற்றிலுமாக ஒழிக்க முயலும் முன்களப் பணியாளர்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்களும் கடத்தல்களும் அரங்கேறி வருவது பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள டேங்க் மாவட்டத்தில் வழக்கமான போலியோ தடுப்பூசி முகாம் நடந்து வந்தது. அப்பொழுது அங்கு திடீரென நுழைந்த அடையாளம் தெரியாத ஆயுதம் தாந்திய கும்பல், தடுப்பூசிப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று ஊழியர்களைப் பலவந்தமாகக் கடத்திச் சென்றது. மிர் ஜானன், இக்ராம், கான்சாலா என அடையாளம் காணப்பட்ட அந்த மூன்று ஊழியர்களையும் துப்பாக்கி முனையில் மர்ம இடத்திற்கு அழைத்துச் சென்றதாக உள்ளூர் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதுடன், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. டேங்க் மாவட்டத்தின் சொர்கார் பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், இது போன்ற பல சம்பவங்கள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் 2 அன்று அதே டேங்க் மாவட்டத்தின் ஷேக் அத்தார் பகுதியில் நான்கு போலியோ பணியாளர்கள் கடத்தப்பட்டனர். அதேபோல், லோயர் சவுத் வஜிரிஸ்தான் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட மற்ற இரு தடுப்பூசி பணியாளர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த நவம்பர் 4 ஆம் தேதி கைபர் மாவட்டத்தின் ஜம்ருத் பகுதியில் சப்ரி என்ற இடத்தை ஒட்டிய பகுதியில் போலியோ தடுப்பூசி முகாமை மேற்பார்வை செய்து வந்த ஜலில் கான் என்ற அதிகாரியும் கடத்தப்பட்டார். இதுமட்டுமின்றி, மொமந்த் மாவட்டத்தில் நவம்பர் 3 ஆம் தேதி போலியோ தடுப்பூசி குழுவினருக்கு பாதுகாப்புக்காக சென்ற இரண்டு காவலர்கள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார். தீவிரவாதத் தாக்குதல்களையும் கடத்தல்களையும் எதிர்கொண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் பணியாளர்களின் பாதுகாப்புக்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.