பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் பாக் ரேஞ்சர்ஸ் எனும் அந்நாட்டு பாதுகாப்பு படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அடிப்படை உரிமைகள், அரசியல் சீர்திருத்தங்கள் கோரி தொடர்ந்து போராடி வரும் ஜம்மு காஷ்மீர் ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) அமைப்பை அண்மையில் பாகிஸ்தான் அரசு தடை செய்தது.
அதன் தொடர்ச்சியாக, அந்த அமைப்பின் தலைவர் சௌகத் நவாஸ் மிர் மற்றும் 600க்கும் மேற்க ஆர்வலர்களை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் விதித்த தடைகளையும் மீறி, அப்பாஸ்பூரில் உள்ள சர்தார் குலாம் உசேன் கான் விளையாட்டு மைதானத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என சுமார் 40,000க்கும் மேற்பட்டோர் இன்று திரண்டனர்.
அதேபோல, இன்று டுடியால் பகுதியில் அமைதியான முறையில் திரண்டிருந்த பொதுமக்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாகவும் JAAC அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற முதற்கட்டப் போராட்டங்களின் போதே பாகிஸ்தான் காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
போராட்டங்களை ஒடுக்குவதற்காகப் அப்பகுதிக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வருவதைத் தடுத்து பாகிஸ்தான் அரசு நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இம்மாத இறுதியில் அங்குள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கவும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், JAAC அமைப்பின் முக்கிய நிர்வாகியான சர்தார் அமன் கான் வெளியிட்ட வீடியோ செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதி மக்களிடம் நான் கோரிக்கை வைக்கிறேன்.
கடந்த ஒரு மாதமாக எங்கள் பகுதி மக்கள் பாகிஸ்தானின் ராணுவ ஒடுக்குமுறையை சந்தித்து வருகின்றனர். எங்களின் உணவு மற்றும் மருந்துப் போக்குவரத்துப் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.
எங்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் மருந்துகளின் தட்டுப்பாடு நிலவுகிறது. எங்களுக்கு உங்களின் உதவி தேவை" என கேட்டுள்ளார்.