இந்தியாவைத் தனது நீண்டகாலப் போட்டியாளராகப் பார்க்கும் சீனா, ராணுவம், பொருளாதாரம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் துறைகளில் இந்தியாவின் எழுச்சியைத் தடுக்கத் தொடர்ந்து முயற்சித்து வருவதாக ஆணையம் எச்சரித்துள்ளது.
மே 2025-இல் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்குச் சீனா ராணுவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது, இந்தியாவின் வளர்ச்சியையும் எழுச்சியையும் கட்டுப்படுத்தும் உத்தியின் ஒரு பகுதியே என்று அமெரிக்க நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. அமெரிக்க-சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வு ஆணையம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள தனது 2026-ஆம் ஆண்டு அறிக்கையில் இந்தத் தகவல்களை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த மோதலின் போது இந்தியாவுடன் நேரடியாக போரில் ஈடுபடாமலேயே, பாகிஸ்தானின் வலிமையை அதிகரிக்கச் சீனாவால் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை இச்சம்பவம் காட்டியதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மோதலின் போது பாகிஸ்தான் விமானப்படைக்குச் சீனா கள அளவிலான தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதை சீன அரசு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சீனப் பொறியாளர் ஜாங் ஹெங் முன்னர் ஒப்புக்கொண்டிருந்ததை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பாகிஸ்தான் விமானப்படை பயன்படுத்தும் ஜே-10சிஇ போர் விமானங்கள் முழுப் போர்த் திறனுடன் செயல்படுவதை உறுதி செய்வதற்காகவே இந்த உதவி வழங்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார். மேலும், மோதலின் போது இந்தியப் படைகளின் நிலைகள் குறித்த உடனடித் தகவல்களைச் சீனா பாகிஸ்தானுக்கு வழங்கியதாக லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங் ஏற்கனவே தெரிவித்திருந்ததையும் அந்த அறிக்கை நினைவூட்டியுள்ளது.
இந்தியாவைத் தனது நீண்டகாலப் போட்டியாளராகப் பார்க்கும் சீனா, ராணுவம், பொருளாதாரம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் துறைகளில் இந்தியாவின் எழுச்சியைத் தடுக்கத் தொடர்ந்து முயற்சித்து வருவதாக ஆணையம் எச்சரித்துள்ளது. எல்லைப் பகுதியில் ராணுவ அழுத்தத்தை அதிகரிப்பது, தொழில்துறைப் பொருட்கள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது, சைபர் தாக்குதல்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவது ஆகியவற்றைச் சீனா கையாண்டு வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் சீனா விரிவுபடுத்தி வரும் ராணுவக் கூட்டணி, இந்தியாவிற்கு 'இருமுனை மோதல்' ஏற்படுவதற்கான வாய்ப்பை முக்கியப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாற்றியுள்ளது என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய ராணுவ நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்பு வளங்களுக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தருவதுடன், பொருளாதார மேம்பாடு மற்றும் கடற்படை நவீனமயமாக்கலுக்கான கவனத்தையும் முதலீட்டையும் திசைதிருப்பக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் தென் சீனக் கடல் பாணியிலான அணுகுமுறைகளைச் சீனா பின்பற்றி வருவதாகவும், நீருக்கடியிலான அம்சங்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் அப்பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்வதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனை எதிர்கொள்ள, வழக்கமான கூட்டு ராணுவப் பயிற்சிகளைத் தாண்டி, உளவுத் தகவல் பகிர்வு, கண்காணிப்பு, பாதுகாப்புத் தொழில்நுட்பம், மருந்துப் பொருட்கள் விநியோகச் சங்கிலி மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தை ஒருங்கிணைந்து கண்காணிப்பது ஆகியவற்றில் அமெரிக்காவும் இந்தியாவும் ஆழமான ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில், இந்தியா தனது மூலோபாய சுயாட்சியைப் பாதுகாத்து, சொந்தத் தேசிய நலன்களின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கும் என்பதை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.