உலகம்

ஓமன் விமானியின் பெயரை வெளியிட்ட அதிகாரிகள்- தடை செய்யப்பட்ட விமானி எப்படி விமானத்தை இயக்கினார் என மொசாட் விசாரணை

ஓமன் நாட்டில் விமானியாக பணிபுரிந்தபோது, பயங்கரவாத செயல்கள் காரணமாக விமானம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் நோக்கி சென்ற பயணிகள் விமானத்தை கடத்திய ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவர் இதற்கு முன்னதாக ஓமன் நாட்டில் விமானியாக பணிபுரிந்தபோது, பயங்கரவாத செயல்கள் காரணமாக விமானம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வை நோக்கி செப்டம்பர் 30ஆம் தேதி ப்ளைதுபாய் என்ற பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது.

180 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானத்தில், பெரும்பாலோனோர் இஸ்ரேல் குடிமக்களாக இருந்தனர்.

மேலும் இந்த விமானத்தை இந்திய விமானியான ஸ்மித் மச்சார் மற்றும் துணை விமானியான ஓமனை சேர்ந்த ஹமாம் அல் ஹமாமி ஆகியோர் இயக்கினர்.

இதையடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓமன் துணை விமானி, இந்திய விமானியை கத்தியால் குத்திவிட்டு, பயணிகளை கொல்லும் வகையில் விமானத்தை தரையில் மோதும்படி இயக்கினார்.

அப்போது இந்திய விமானி தனது உடம்பில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறிய போதும், மன உறுதியுடன் செயல்பட்டு விமானத்தை சவுதியில் உள்ள தபுக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார்.

ஓமன் விமானி

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஓமன் துணை விமானியை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஓமன் துணை விமானி, ஹமாம் அல் ஹமாமி என்பது தெரியவந்துள்ளது.

அல் ஹமாமியின் பயங்கரவாத கருத்துக்கள் குறித்த அச்சம் காரணமாக, அவர் ஓமானில் விமானத்தில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஓமனில் இருந்து வெளியேறிய அவர், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்வதற்கு முன்பு, தனது பெரும்பாலான நேரத்தை சிரியாவில் கழித்ததாகவும், அங்கு அவர் பயங்கரவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

விமானம் இயக்குவதற்கு தடை

ஹமாமியின் பயங்கரவாத கருத்துக்கள் குறித்து கவலைகள் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஓமனின் தேசிய விமான நிறுவனமான ஓமன் ஏரில் அவருக்கு வழங்கப்பட்ட பயிற்சிப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

பயங்கரவாதியான ஹமாமி ஒரு ஓமன் குடிமகனாக அறியப்படுகிறார்.

இவர் ஓமனை சேர்ந்த தந்தைக்கும், சிரியாவை சேர்ந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தவராக அறியப்படுகிறார். இவர் தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் கழித்து வந்துள்ளார்.

மேலும், இவரிடம் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த இரண்டாவது குடியுரிமையை இல்லையென்றும் செய்தி வெளியாகியுள்ளது. ஹமாமி ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் எட்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றியுள்ளார்.

இவர் இதற்கு முன்பு மொராக்கோவின் தேசிய விமான நிறுவனமான ராயல் ஏர் மரோக்கில் பணியாற்றியுள்ளார்.

சவுதியில் உள்ள தபுக் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட விமானி, பின்னர் சவூதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டார்.

மொசாட் விசாரணை

இவர் எப்படி விமானக் குழுவில் இடம்பெற்றார் என்பது குறித்து ஷின் பெட், மொசாட், ராணுவம் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்ட பல அமைப்புகள் விசாரித்து வருகிறது.

விமானி ஹமாமியிடம் இருந்த உடமைகளுக்குள் "சுதந்திர பாலஸ்தீனம்" குழுக்களின் துண்டு பிரசுரங்கள் மற்றும் வெளியீடுகளுடன், பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பிற பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமானி ஹமாமி, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவையும் இஸ்ரேலுக்கு எதிரான விரோதப் போக்கையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார்.

அவரது பயங்கரவாத நோக்கங்கள் குறித்த ஒரு விரிவான விசாரணையை, அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஓமன் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை, மேலும் அந்நாட்டுடன் எந்தவிதமான தூதரக உறவுகளையும் கொண்டிருக்கவில்லை.

இந்த நிலையில் ஓமன் குடிமகனாக இருந்தபோதிலும், டெல் அவிவ் செல்லும் விமானத்தில் பணியாற்ற அல்ஹமாமிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT