இஸ்ரேல் நோக்கி சென்ற பயணிகள் விமானத்தை கடத்தி பயங்கரவாத செயலில் ஈடுபட இருந்த ஓமன் விமானியை விடுவிக்குமாறு சிலர் கூறியபோது, அதை ஊழியர்கள் மறுத்து கட்டப்பட்ட கையுடன் காவல்துறையிடம் ஒப்படைத்த காணொளி காட்சி வெளியாகியுள்ளது.
துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி 27 குழந்தைகள் உட்பட 174 பயணிகளுடன் போயிங்க் 737 மேக்ஸ் என்ற பயணிகள் விமானம் செப்டம்பர் 30 அன்று புறப்பட்டது.
இந்த விமானத்தை இந்திய விமானி ஸ்மித் மச்சார் மற்றும் ஓமன் துணை விமானி ஹமாமி அல்-ஹம்மாமி ஆகியோர் இயக்கினர்.
அப்போது விமானம் கிளம்பிய சில மணி நேரத்தில் இந்திய விமானியின் மீது ஓமன் துணை விமானி கத்தியால் தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில் இந்திய விமானி பலத்த காயம் அடைந்த நிலையிலும், மன உறுதியுடன் செயல்பட்டு விமானி அறையின் கதவை திறந்தார்.
இதையடுத்து விமானி அறையில் உள்ளே வந்த பயணிகள் ஓமன் துணை விமானியின் கையை கட்டினர்.
இந்த 45 நிமிட காணொளியை தற்போது தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த காணொளியில் ஹம்மாமி விமானத்திற்குள் முழங்காலிட்டு நிற்பதும், அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருப்பதும் பதிவாகியுள்ளது.
மேலும் துணை விமானியின் சட்டை முழுவதும் ரத்த கறையுடன் இருப்பதும், அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து ஓமன் துணை விமானியை விடுவிக்குமாறு சில பயணிகள் கூறியபோது, அவரை காவல்துறையிடம் மட்டுமே ஒப்படைப்போம் என ஊழியர்கள் கூறுவது இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த காணொளியில் இன்னும் ஒரு மணி நேரம், இன்னும் 40 நிமிடங்கள் மற்றும் இன்னும் ஐந்து நிமிடங்கள் என ஊழியர்கள் பேசுவதும் இடம்பெற்றுள்ளது. காவல்துறை விமானத்திற்கு வரும் வரையில், அவரின் கை கட்டப்பட்டுள்ளதும் பதிவாகியுள்ளது.
இதையடுத்து ப்ளைதுபாய் குழுவினர் சிலர், ஓமன் துணை விமானியை விடுவிக்க வேண்டும் என்று தாங்கள் விரும்பியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தனர்.
ஆனால் எந்த சூழ்நிலையிலும் ஓமன் துணை விமானியை நாங்கள் விடுவிக்க மாட்டோம் என இஸ்ரேல் பயணிகள் பிடிவாதமாக இருந்ததாகவும், நாங்கள் விமானியை கொல்ல விரும்பவில்லை, மாறாக விமானி எங்களை கொல்லாமல் இருக்க விரும்புகிறோம் என பயணி ஒருவர் கூறுவதும் இடம்பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து சில தாக்குதல்களுக்கு உள்ளான ஓமன் துணை விமானியை உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு செயற்கை ஆக்சிஜன் தருவதும் காணொளியில் இடம்பெற்றுள்ளது.
பயணிகள் அவரவர் இருக்கைகளுக்கு திரும்பிச் செல்லுமாறும், விமானி அறைக்கு முன்னால் உள்ள பகுதியில் அவர்களை தனியாக விட்டுவிடுமாறும் விமானப் பணியாளர்கள் வலியுறுத்தினர்.
இந்த தாக்குதலில் பணியாளர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அஞ்சிய இஸ்ரேலிய பயணிகள், அதற்கு பதிலாக விமானத்தின் நடுப்பகுதியில் இருக்கைகளில் அமர்ந்து விமானியை கண்காணித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த ஒரே மருத்துவர் என்று கூறப்படும் பல் மருத்துவரான ஷோட்டா மூசாயேவ், படுகாயமடைந்த மச்சாருக்கு சிகிச்சை அளித்து முதலுதவி செய்தார்.