உலகம்

பயங்கரவாதிகள் மேற்கொண்ட விமான கடத்தல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது: இஸ்ரேல்

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட்டது.

துபாயில் இருந்து 180 பயணிகளுடன் இஸ்ரேல் நோக்கி சென்ற பயணிகள் விமானத்தை கடத்தி, இஸ்ரேல் பயணிகளை கொலை செய்வதற்கு சதியில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இஸ்ரேல் தனது கண்டனத்தை பதிவுசெய்துள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட்டது.

அப்போது விமானம் கிளம்பி சில மணி நேரத்தில் விமானிகள் உட்கார்ந்திருந்த அறையில் விமானிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

இதையடுத்து பயணிகள் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அவசரகால சமிஞ்சைகள் இஸ்ரேல் நாட்டிற்கு கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்குவாக் 7700 (பொது அவசரநிலை) எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் விமானம் வழக்கத்திற்கு மாறாக சுமார் 15,000 அடி உயரத்தில் தாழ்வாக பறந்தபோது, ஸ்குவாக் 7500 (விமான கடத்தல்) என்ற எச்சரிக்கை விடப்பட்டது.

இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமானத்தில் ஏற்பட்ட குழப்பம் குறித்து பாதுகாப்பு அமைச்சருடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இஸ்ரேலிய வான்வெளியும் சிறிது நேரத்தில் மூடப்பட்டது.

இதன் காரணமாக பயனிகள் விமானம், ஜோர்டன் வான்வெளிக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் யு டர்ன் செய்து சவுதி அரேபியா நோக்கி திரும்பியது. பின்னர் இந்த விமானம், சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

சவுதியில் தரையிறக்கப்பட்ட பயணிகளை இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு வேறு விமானத்தை அனுப்பியது.

இந்த நிகழ்வு குறித்து விமானத்தில் பயணம் செய்த மிரியம் என்ற பயணி கூறுகையில், விமானியின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டு, விமானத்தின் கதவை ஊழியர்கள் திறந்த போது, விமானிகளில் ஒருவர் ரத்த காயங்களுடன் தரையில் கிடந்ததை தான் பார்த்ததாக கூறினார்.

இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற பயணிகள் விமானத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு விமானியும், ஓமன் நாட்டை சேர்ந்த ஒரு துணை விமானியும் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமான கடத்தல் சம்பவம் குறித்து இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென்-க்விர், இந்த நிகழ்வை ஒரு பயங்கரவாத சம்பவம் என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நமது எதிரிகள் நமது உயிரை மதிக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது நாம் கருணை காட்ட வேண்டும் என்ற அப்பாவித்தனமான எண்ணத்திற்கு இன்று மீண்டும் ஒரு பதில் கிடைத்துள்ளது.

பயங்கரவாதம் என்பது ஒரு அரக்கன்; அதைத் தோற்கடித்து முற்றிலுமாக ஒழிப்பதை தவிர, அதனுடன் வேறு எந்த உடன்பாட்டையும் ஒருபோதும் மேற்கொள்ளக்கூடாது” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பதிவை தொடர்ந்து, அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் மிரி ரெகேவ், இஸ்ரேல் நாட்டிற்கான அனைத்து ப்ளைதுபாய் விமான சேவைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இஸ்ரேல் நாட்டுடன் முறையான தூதரக உறவுகள் இல்லாத ஒரு நாட்டை சேர்ந்த விமானியை, பயணிகள் விமானத்தில் பணியமர்த்தியதன் மூலம்,

ஐக்கிய அரபு அமீரகம் இருதரப்பு விமான போக்குவரத்து ஒப்பந்தங்களை மீறியுள்ள்தா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ரெகேவ் கோரிக்கை வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT