ஹார்முஸ் நீரிணையை வழியாகச் செல்லும் பிரம்மாண்ட கப்பல்கள் தற்போது முடங்கி கிடக்கின்றன. மாற்றுப் பாதையான யான்பு துறைமுகத்தின் கொள்ளளவு மிகக் குறைவாகும்.
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அராம்கோ, ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிரடியாகக் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்ச் மாதத்தில் இதுவரை அராம்கோ நாள் ஒன்றுக்கு 43.55 லட்சம் பேரல் (பீப்பாய்) கச்சா எண்ணை ஏற்றுமதி செய்தது. பிப்ரவரியில் 71.08 லட்சம் பேரலாக நாள் ஒன்றுக்கு ஏற்றுமதி செய்து இருந்தது.
தற்போது ஏப்ரல் மாதத்திற்கு 2-வது முறையாக ஆசியாவுக்கான எண்ணெய் வினியோகத்தை சவுதி அராம்கோ நிறுவனம் குறைத்து உள்ளது.
இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பங்கு மத்திய கிழக்கு நாடுகளையே சார்ந்துள்ளது.
அராம்கோவின் இந்த வினியோகக் குறைப்பு நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடும், விலை உயர்வும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
மத்திய அரசு ரஷியா அல்லது ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்து கூடுதலாக எண்ணெய் வாங்க முயற்சிக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.