வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கிரூஸ் ஏவுகணை சோதனைகள் மற்றும் மின்னணு போர் வழிமுறைகள் உள்ளிட்ட ஆயுத சோதனைகளை 5000 டன் எடை கொண்ட காங் கோன் போர்க்கப்பலில் இருந்து மேற்பார்வையிட்டார்.
வடகொரிய கடற்படைக்கு அணு ஆயுதங்களை வழங்குவதாகவும், மேலும் 10,000 டன் எடை கொண்ட புதிய போர்க்கப்பல்களை உருவாக்குவதாகவும் கடந்த ஆண்டு அதிபர் கிம் உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை நடந்த ஆயுத சோதனைக்கு பிறகு, போர்க்கப்பலின் சோதனை செயல்முறையை முடித்து, இரண்டு மாதங்களுக்குள் கடற்படை பயன்பாட்டிற்கு கொண்டுவர அவர் உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் போர் தடுப்பு நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தி, முழுமையான அதிகாரத்தை கொண்டிருப்பதற்கான எங்களது அரசியல் விருப்பத்தையும் உறுதியையும் இன்னும் தெளிவான செயல்கள் மூலம் வெளிப்படுத்துவோம் என்று அதிபர் கிம் கூறி இருந்தார்.
கடந்த ஆண்டு காங் கோன் கப்பல் நீரில் இறக்கி சோதனை செய்தபோது, பகுதியளவு கடலில் மூழ்கி சேதமடைந்தது.
இதைத்தொடர்ந்து அலட்சியம் மற்றும் பொறுப்பின்மையே இந்த விபத்திற்கு காரணம் என்றும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு அதிபர் கிம் உத்தரவிட்டிருந்தார்.