சவுதி அரேபியா மீது ஹவுதி டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியபோது, சவுதிக்கு ஆதரவாக ஹவுதி மீது தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு பின்னர் திரும்பப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் முடிவடைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே ஹார்முஸ் தொடர்பாக இன்னும் சண்டை நீடித்து வருகிறது.
இந்த ஸ்திரதன்மையற்ற நிலையை பயன்படுத்திக் கொண்டு, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிக்குழு, ஏமனின் சர்வதேச குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு உதவி வரும் சவுதி அரேபியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த தொடங்கியது.
இந்த தாக்குதல் சவுதி அரேபியா சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. இதனால் பாதுகாப்பில் தனது கூட்டு நாடான அமெரிக்காவின் உதவியை நாட முடிவு செய்தது.
ஏற்கனவே ஈரானுக்கு எதிரான போர் காரணமாக, உள்நாட்டு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஹவுதி கிளர்ச்சி குழுவிற்கு எதிராக தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ஆலோசகர் கூறியதாக தெரிகிறது. இதனால் டொனால்டு டிரம்ப் தாக்குதல் நடத்த வேண்டாம் என்ற திட்டத்தில் இருந்துள்ளார்.
பின்னர், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், டிரம்பிற்கு போன் செய்து ஹவுதி எதிரான சண்டையில உதவி கேட்டுள்ளார். இதனால், பென்டகானை தொடர்பு கொண்ட டிரம்ப் ஏமனில் உள்ள ஹவுதியின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் இலக்குகளை கண்டறிந்து, பின்னர் விமானத்தில் குண்டுகளை லோடு செய்து தயாரான நிலையில் இருந்துள்ளன. அப்போது திடீரென தாக்குதல் நடத்த வேண்டாம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்க ராணுவம் தாக்குதலை நிறுத்தியுள்ளது.
முதலில் வேண்டாம், பின்னர் தாக்குதால் நடத்துங்கள், அதன்பின் வேண்டாம் என டிரம்ப் மூன்று முறை முடிவுகளை மாற்றியுள்ளார். டிரம்பின் இந்த மாற்றம் குறித்து வெள்ளை மாளிகை விரைவான விளக்கம் அளிக்கவில்லை. அதிகாரி ஒருவர், சவுதியுடன் அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் கொண்டுள்ளது. இதனால் எப்போதும் எங்களுடைய கூட்டாளியை பாதுகாப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் உடனான சண்டை முடிவடையாத நிலையில், ஹவுதி இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினால் மற்றொரு மோதலுக்கு முன்னணி வகுக்கும் என்பதால் டிரம்ப் முடிவை மாற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஹவுதியை பொறுத்தவரை, அந்த அமைப்புடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அமெரிக்காவுடன் சண்டையிடப் போவதில்லை என்று ஹவுதிகள் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் டிரம்ப் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாக நிருபர் தெரிவித்துள்ளார்.
செங்கடலில் செல்லும் அமெரிக்க கப்பல்களை தாக்கமாட்டோம் என்று ஹவுதி தெரிவித்துள்ளது. இதனால் கூட டிரம்ப் முடிவை மாற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஈரானுக்கு எதிரான போரில் சவுதி அரேபியாவின் ஒத்துழைப்பு நமக்கு தேவை என்று சில அமெரிக்க ராணுவ அதிகாரிகள் வாதிட்டுள்ளனர். அதேவேளையில், அமெரிக்கா ஒத்துழைக்காத பட்சத்தில் தங்களால் செல்வாக்கை செலுத்த முடியும் என்பதை சவுதி அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், ஏமன் அரசு ஹவுதிக்கு எதிராக தரைவழி தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது.
எதுவாக இருந்தாலும் டிரம்பின் முடிவில் இன்னொரு மோதல் வெடிக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.