செங்கடலில் அமெரிக்க கப்பல்களை தாக்கமாட்டோம்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

உலக வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் பாப்-அல்-மண்டேப் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது.
US–Houthi talks
Published on
Summary

செங்கடல் வழியாக செல்லும் அமெரிக்க வர்த்தக கப்பல்களை தாக்க போவதில்லை என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏமன் நாட்டில் தீவிரமடைந்து வரும் மோதலில் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக எந்தவொரு நாடும் போரில் ஈடுபட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதத்தை கொண்டுள்ள முக்கிய போக்குவரத்து தளமான பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில் ஹவுதிகள் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹவுதிகளை எதிர்த்து ஏமன் நாட்டிற்கு ஆதரவாக போரில் ஈடுபட்டு வரும் சவுதி அரேபியா, பெருமளவிலான சேதத்தை சந்தித்து வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்காவின் உதவியை சவுதி அரேபியா நாடியபோது, ஹவுதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்கா மறுத்துவிட்டது.

டிரம்ப் பேச்சுவார்த்தை

இதையடுத்து கடந்த வாரம் ஹவுதிகள் தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் ஹவுதிகள் தங்களுடன் சண்டையிட விரும்பவில்லை எனவும், போரில் அமெரிக்காவின் தலையீட்டை தவிர்க்க விரும்புவதாகவும், அமெரிக்க கப்பல்களை கடல் வழியாக செல்ல ஹவுதிகள் அனுமதிப்பதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை சுற்றியுள்ள பகுதிகளை ஹவுதிகள் கைப்பற்றியதை தொடர்ந்து, ஹவுதிகளை அழைத்து ஓமன் நாட்டில் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதாக தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹவுதி குழு மூத்த உறுப்பினர்

இந்த சந்திப்பில் ஹவுதி கிளர்ச்சி குழுவின் மூத்த உறுப்பினரான முகமது அல்-புகைதி கலந்துகொண்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து முகமது அல்-புகைதி கூறுகையில், பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியில் சவுதி அரேபியாவை தவிர, வேறு எந்த நாட்டையும் நாங்கள் குறிவைக்கவில்லை என தெரிவித்தார்.

ஓமன் மத்தியஸ்தம்

அமெரிக்காவுக்கும் ஹவுதிகளுக்கும் இடையே கடந்த 2025-ஆம் ஆண்டு நடந்த போரில், ஓமன் நாடு மூலமாக மறைமுகமாக மத்தியஸ்தம் நடைபெற்றதை புகைதி ஒப்புக்கொண்டார்.

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய வழித்தடமான பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை மூடுவதற்கு தாங்கள் முயலவில்லை என அவர் கூறினார்.

மேலும் தங்கள் ராணுவ நடவடிக்கையின் நோக்கம் ஏமன் உட்பட அனைவருக்கும் பாப்-அல்-மண்டேப் ஜலசந்தி வழியாக தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதே ஆகும் என புகைதி தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடரும்

இதையடுத்து தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீதான பத்தாண்டுகால முற்றுகையை சவுதி அரேபியா நீக்கி, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கடல் துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்ல அனுமதிக்கும் வரை, சவுதி மீதான தாக்குதல் தொடரும் எனவும் ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சவுதி அரேபியாவுடனான பேச்சுவார்த்தைக்கு, தாங்கள் தயாராக இருப்பதாகவும் ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com