இஸ்ரேலில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் அக்டோபர் 27 பிரதமர் தேர்தல் நடைபெற உள்ளது. இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன.
அரசாங்கத்தை அமைக்க, எந்தவொரு கூட்டணிக்கும் குறைந்தபட்சம் 61 இடங்களின் ஆதரவு தேவை.
இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய நான்கு முக்கிய கருத்துக் கணிப்புகள், எந்தவொரு கூட்டணியும் இந்த எண்ணிக்கையை எட்டவில்லை என்பதைக் காட்டுகின்றன.
நேதன்யாகுவின் லீகுத் (Likud) கட்சிக்கு எதிர்க்கட்சியான இஸ்ரேல் முன்னாள் ராணுவ தலைவர் காடி ஐசென்கோட் உடைய யாசர் (Yashar) கட்சி பிரதான போட்டியாளராக உள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட நான்கு கருத்துக் கணிப்புகளில், இரண்டில் முன்னாள் எதிர்க்கட்சி (யாசர்) முன்னிலையில் உள்ளது.
ஒன்றில் இரு தரப்பினரும் சமநிலையில் உள்ளனர். மற்றொன்றில் தற்போதைய பிரதமர் நேதன்யாகுவின் தரப்பு (லீகுத்) முன்னிலையில் உள்ளது. ஆனால் எதற்கும் பெரும்பான்மை இல்லை.
காடி ஐசன்காட்டின் 'யாஷர்' கட்சிக்கு 22 முதல் 23 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆளுங்கட்சியான லிகுட் கட்சிக்கு 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கணிப்புகள் கூறுகின்றன.
சிலர் நேதன்யாகுவுக்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்க விரும்பும் வேளையில், மற்றவர்களோ 2023 ஹமாஸ் தாக்குதலுக்கு அவரின் அரசே பொறுப்பு என கருதுகின்றனர்.
பிரதமருக்கான மக்கள் செல்வாக்குத் தரவரிசையில் நேதன்யாகுவை (38%) விட ஐசென்கோட் (43%) முன்னிலையில் உள்ளார்.
2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் நடந்த ஹமாஸ் தாக்குதலில் கிட்டத்தட்ட 1,200 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து காசாவில் இஸ்ரேலிய ராணுவம் 3 ஆண்டுகளாக நடத்திய தாக்குதலில் 74,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகளே ஆவர்.
இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேலில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதேநேரம் கடத்திச் செல்லப்பட்ட பணய கைதிகளை மீட்பதில் நேதன்யாகுவின் அரசு அணுகுமுறைக்கு எதிராக ஒரு பெரும்பான்மை மக்கள் உள்ளனர். நேதன்யாகு அரசுக்கு எதிராக அந்நாட்டில் பலமுறை போராட்டங்கள் பேரணிகள் நடந்துள்ளன.
மறுபுறம், காசாவை இஸ்ரேல் முழு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்று கருதும் இனவாத இஸ்ரேலியர்கள், நேதன்யாகுவுக்கு வாய்ப்பளிக்க விரும்புகின்றனர்.
எனவே ஹமாஸ் தாக்குதல் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்தல் நேதன்யாகுவுக்கு சவாலாக அமைந்துள்ளது.
2023 ஹமாஸ் தாக்குதலில் தாக்குதலில் பெற்றோரை இழந்த, கிப்புட்ஸ் பெ'ஈரியைச் சேர்ந்த மெரவ், இத்தகைய ஒரு பெரும் தாக்குதல் நடந்த அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று கூறுகிறார்.
அடுத்த அரசாங்கத்தை யார் அமைக்க வேண்டும் என்பதில் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடையே கூட கருத்து வேறுபாடு நிலவுகிறது.
தேர்தலுக்கு முன்னதாக, நேதன்யாகு ஏழு ஆண்டுகள் பழைமையான ஊழல் வழக்கிலும் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தொழிலதிபர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாகவும், தங்களுக்குச் சாதகமான செய்தி வெளியீடுகளுக்கு ஈடாக ஊடகங்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டதாகவும் நேதன்யாகு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேலில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை என்றால், சிறிய கட்சிகள் அரசாங்கம் அமைப்பதற்கான வாய்ப்பை முடிவெடுக்கும்.
தேர்தலுக்குப் பிறகு, அரசாங்கத்தை அமைப்பதற்கு நேதன்யாகுவுக்கும் எதிர்க்கட்சிக்கும் மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படலாம்.
கணிப்புகளின்படி, சில சிறிய கட்சிகள் 12 முதல் 15 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.