உலகம்

VIDEO- மரண விளிம்பில் துணிச்சல்: சிறுவனுக்கு கை கொடுத்த டி-சர்ட்- உயிரை மீட்ட ராணுவம் !

இந்த திடீர் வெள்ளத்தால் சீனா-நேபாள எல்லைப் பகுதிகளான நுவாகோட் மற்றும் ரசுவா ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நேபாள நாட்டின் வடக்கே அமைந்த ரசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட கனமழை காரணமாக போதே கோஷி நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பல மாடி கட்டிடம் ஒன்றின் மேல் கூரையில் சிறுவன் ஒருவன் தனியாகச் சிக்கிக் கொண்டான். நாற்புறமும் சீறிப்பாய்ந்த வெள்ள நீரால் சூழப்பட்டு, வேறு எந்த வழியும் இன்றி உயிருக்குப் போராடிய நிலையில், அவன் காப்பாற்றக் கோரி தான் அணிந்திருந்த டி-சர்ட்டை கழற்றி வானத்தை நோக்கித் தொடர்ச்சியாக வீசி சிக்னல் கொடுத்தான்.

வானில் பறந்த ஹெலிகாப்டர்

சிறுவனின் சிக்னலைக் கண்ட நேபாள ராணுவப் மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டரை உடனடியாக அக்கட்டிடத்தின் கூரைக்கு மிக நெருக்கமாகத் தாழ்த்திப் பறக்கவிட்டனர். மிகக் கடுமையான காற்றும் வெள்ள இரைச்சலும் இருந்த போதிலும், திறமையுடன் செயல்பட்ட ராணுவ வீரர் ஒருவர், ஹெலிகாப்டரின் கீழ் பகுதியைப் பிடித்துக் கொண்டு நின்ற சிறுவனின் கையைப் பற்றி இழுத்து விமானத்திற்குள் பத்திரமாக ஏற்றினார். இந்தத் விறுவிறுப்பான மீட்புப் பணி தொடர்பான காணொளி தற்போது உலகளவில் இணையத்தில் வைரலாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

தொடரும் மீட்புப் பணிகள்

இந்த திடீர் வெள்ளத்தால் சீனா-நேபாள எல்லைப் பகுதிகளான நுவாகோட் மற்றும் ரசுவா ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன, சாலைகள் மற்றும் பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்களை ராணுவம் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டு வருகிறது. காணாமல் போன நூற்றுக்கணக்கானோரைக் கண்டுபிடிக்கத் தீவிர தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது.