

நேபாள நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகம் ஆற்றின் வழியே பல மைல் தூரம் அடித்துச் செல்லப்பட்டது. கரை ஒதுங்கிய அந்தப் பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த பெரும் தொகையை அப்பகுதி மக்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரு வங்கியின் வலுவான பணப் பெட்டகம் மிதந்து சென்றுள்ளது. இது திரிசூலி ஆற்று வழியே பல கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டு, தாதிங் மாவட்டத்தின் கலச்சி கிராம ஊராட்சிக்குட்பட்ட பெல்குகோலா பகுதியில் கரை ஒதுங்கியது. வெள்ள நிவாரணப் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், ஆற்றின் ஓரம் மிதந்து வந்த இந்த இரும்புப் பெட்டகத்தை அப்பகுதி மக்கள் சிலர் பார்த்துள்ளனர்.
இரும்புப் பெட்டகத்தை கண்டெடுத்த நபர்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல், கருவிகளைக் கொண்டு அதனை உடைத்துள்ளனர். அதனுள் வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை பணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அதைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாதிங் மாவட்ட காவல்துறையினர் உடனடி விசாரணை மேற்கொண்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட சோதனையில், கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 19 முதல் 49 வயது வரையிலான 29 பேரைப் பிடித்துக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 92,68,505 நேபாள ரூபாயை (இந்திய மதிப்பில் சுமார் 58 லட்சம் ரூபாய்) காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் கலச்சி, சித்தாலேக் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 2,400-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலத்திலிருந்து தங்கத் தோடுகளைத் திருடிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஒருபுறம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், இதுபோன்ற தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நேபாள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.