நிர்மல் புர்ஜா 
உலகம்

பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த உலகப்புகழ் மலையேற்ற வீரர்.. யார் இந்த நிர்மல் புர்ஜா?

சுமார் 6,600 மீட்டர் உயரத்தில் வீரர்கள் ஏறிக் கொண்டிருந்தபோது பனிச்சரிவு ஏற்பட்டது.

நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பாகிஸ்தானில் மலையேற்றத்தின்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 30 அன்று பாகிஸ்தானின் கரகோரம் மலைத்தொடரின் பிராட் பீக் சிகரத்தை ஏறுகையில் ஏற்பட்ட பனிச்சரிவில் 'நிம்ஸ் டாய்' என்று அழைக்கப்படும் நிர்மல் புர்ஜா உட்பட 10 கொண்ட குழு காணாமல் போனது.

தேடுதல் பணிகளின்போது நிர்மல் புர்ஜா உடலுடன் சேர்த்து மேலும் 5 வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

பனிச்சரிவு

பாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில் 8,047 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிராட் பீக் சிகரம் உலகின் 12வது மிக உயரிய சிகரம் ஆகும்.

ஜூலை 30, நண்பகல் வேளையில் பிராட் பீக் சிகரத்தின் உச்சியை அடையும் நோக்கில், சுமார் 6,600 மீட்டர் உயரத்தில் வீரர்கள் ஏறிக் கொண்டிருந்தபோது இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

பனிச்சரிவுக்கு பின் மலையேற்றக் குழுவினருடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மலையேற்ற அமைப்பான பாகிஸ்தான் அல்பைன் கிளப் தகவலின்படி, மாயமான 10 பேர் கொண்ட குழுவில் நிர்மல் புர்ஜா உட்பட நேபாளத்தை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள், பாகிஸ்தானின் ஹன்சாவை சேர்ந்த சுஹைல் சாகி, ஓமன் நாட்டை சேர்ந்த நதீரா, அமெரிக்காவை சேர்ந்த மல்லோரி கேஸ், சீனாவை சேர்ந்த வாங் மற்றும் மேலும் ஒரு வெளிநாட்டு மலையேற்ற வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

யார் இந்த நிர்மல் புர்ஜா?

நேபாளத்தில் பிறந்த நிர்மல் புர்ஜா, பிரிட்டிஷ் ராணுவத்தின் கூர்கா படைப்பிரிவிலும், பின்னர் இங்கிலாந்தின் சிறப்புப் படகு சேவையிலும் (SBS) பணியாற்றியவர்.

2019இல் உலகின் 8,000 மீட்டருக்கு மேற்பட்ட 14 சிகரங்களையும் வெறும் 6 மாதங்களில் ஏறி உலக சாதனை படைத்தார்.

இவருடைய இந்த சாதனை நெட்பிலிக்ஸின் '14 Peaks: Nothing Is Impossible' என்ற ஆவணப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

8,000 மீட்டர் உயரமுள்ள அனைத்து 14 சிகரங்களையும் மூன்று முறை ஏறி முடித்த முதல் மனிதர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைக்கும் முயற்சியில் அவர் இந்த மலையேற்றத்தை மேற்கொண்டிருந்தார்.