பாகிஸ்தானில் மலையேற்றத்தின்போது பனிச்சரிவு.. பிரபல வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் மாயம்

உலகின் 8,000 மீட்டருக்கு மேற்பட்ட 14 சிகரங்களையும் வெறும் 6 மாதங்களில் ஏறி உலக சாதனை படைத்தார்.
நிர்மல் புர்ஜா
நிர்மல் புர்ஜா
Published on

பாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில் 8,047 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிராட் பீக் சிகரம் உலகின் 12வது மிக உயரிய சிகரம் ஆகும்.

இங்கு நேற்று (ஜூலை 30) ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள வம்சாவளி மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.

பனிச்சரிவு

நேற்று நண்பகல் வேளையில் பிராட் பீக் சிகரத்தின் உச்சியை அடையும் நோக்கில், சுமார் 6,600 மீட்டர் உயரத்தில் வீரர்கள் ஏறிக் கொண்டிருந்தபோது இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

பனிச்சரிவுக்கு பின் மலையேற்றக் குழுவினருடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மலையேற்ற அமைப்பான பாகிஸ்தான் அல்பைன் கிளப் தகவலின்படி, மாயமான 10 பேர் கொண்ட குழுவில் நிர்மல் புர்ஜா உட்பட நேபாளத்தை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள், பாகிஸ்தானின் ஹன்சாவை சேர்ந்த சுஹைல் சாகி, ஓமன் நாட்டை சேர்ந்த நதீரா, அமெரிக்காவை சேர்ந்த மல்லோரி கேஸ், சீனாவை சேர்ந்த வாங் மற்றும் மேலும் ஒரு வெளிநாட்டு மலையேற்ற வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நம்பிக்கை

பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் இர்பான் அர்ஷத் தலைமையில் தேடுதல் பணி நடந்து வருகிறது.

மோசமான வானிலை காரணமாக மீட்பு ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழியாக தேடுதல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நிர்மல் புர்ஜாவின் ஜிபிஎஸ் டிராக்கரின் இருப்பிடம் பனிச்சரிவுக்கு பிறகும் மாறியிருப்பதை மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

எனவே அவர் பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும், டிராக்கரின் நகர்வு அவர் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறை உணர்த்துவதாகவும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

யார் இந்த நிர்மல் புர்ஜா?

நேபாளத்தில் பிறந்த நிர்மல் புர்ஜா, பிரிட்டிஷ் ராணுவத்தின் கூர்கா படைப்பிரிவிலும், பின்னர் இங்கிலாந்தின் சிறப்புப் படகு சேவையிலும் (SBS) பணியாற்றியவர்.

2019இல் உலகின் 8,000 மீட்டருக்கு மேற்பட்ட 14 சிகரங்களையும் வெறும் 6 மாதங்களில் ஏறி உலக சாதனை படைத்தார்.

இவருடைய இந்த சாதனை நெட்பிலிக்ஸின் '14 Peaks: Nothing Is Impossible' என்ற ஆவணப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

8,000 மீட்டர் உயரமுள்ள அனைத்து 14 சிகரங்களையும் மூன்று முறை ஏறி முடித்த முதல் மனிதர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைக்கும் முயற்சியில் அவர் இந்த மலையேற்றத்தை மேற்கொண்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com