உலகம்

"பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. ஈரான் கோரிக்கைப்படி மேலும் 10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தம்" - டிரம்ப் | Iran war

ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் எரிசக்தி நிலையங்கள் அழிப்பு நடவடிக்கையை 10 நாட்களுக்கு ஏப்ரல் 6-ந் தேதி இரவு 8 மணி வரை ஒத்திவைத்து உள்ளேன்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் உலகின் கச்சா எண்ணை போக்குவரத்துக்கு முக்கிய பாதையாக உள்ள ஹோர் முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது.

அந்த ஜலசந்தியை கடக்க முயன்ற சில கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்று ஈரான் அறிவித்தது.

இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

அதை நிராகரித்த ஈரான், தங்களது மின் நிலை யங்களை தாக்கினால் வளைகுடா நாடுகளில் உள்ள மின் நிலைங்களை தாக்குவோம் என்று தெரிவித்தது.

இதற்கிடையே டிரம்ப் விதித்த கெடு கடந்த 24-ந்தேதி காலை முடிவடைய இருந்த நிலையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதால் அதன் மின்நிலையங்கள் மீதான தாக்குதலை மேலும் 5 நாட்கள் நிறுத்தி வைப்ப தாக டிரம்ப் அறிவித்தார்.

ஆனால் அமெரிக்காவுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும் அமெரிக்கா தெரிவித்த 15 அம்ச திட்டத்தையும் நிராகரித்தது. ஆனாலும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த நிலையில் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது,

ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் எரிசக்தி நிலையங்கள் அழிப்பு நடவடிக்கையை 10 நாட்களுக்கு ஏப்ரல் 6-ந் தேதி இரவு 8 மணி வரை ஒத்திவைத்து உள்ளேன். பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

போலி செய்திகள் மற்றும் பிறரின் தவறான தகவல்கள் பரப்பி வந்த போதிலும், பேச்சு வார்த்தைகள் மிகச் சிறப்பாகவே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டிரம்ப் விதித்த மேலும் 5 நாட்கள் கெடு இன்று முடிவடைய இருந்த நிலையில் அதை மேலும் 10 நாட்கள் நீடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்த பேச்சு வார்த்தை நடந்து வருவதாக டிரம்ப் கூறிவரும் நிலையில் அதை ஈரான் மறுப்பதால் குழப்பம் நிலவி வருகிறது.

பேச்சுவார்த்தை நடப்பதை வெளியே சொல்ல ஈரான் தலைவர்கள் பயப்படுகிறார்கள் என்று டிரம்ப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.