காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொழுந்துவிட்டு எரிந்த தீயில் தாய் உடல் கருகி பலியான நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய சிறுமி மீட்கப்பட்டுள்ள சம்பவம் உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர் சூழலுக்கு இடையே, காஸா நகரில் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காஸா நகரில் உள்ள முக்கியக் குடியிருப்புக் கட்டடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் கோர முகமாக அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருவது தொடர்கிறது.
இந்தத் தாக்குதலின் போது அப்பகுதியில் உள்ள ஒரு வீடு தீப்பற்றி எரியத் தொடங்கியது. அந்த வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 33 வயதான ரீம் அசாத் அவாத் என்ற பாலஸ்தீனப் பெண் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மற்றொரு தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தாயின் உயிரைப் பறித்த இந்த பயங்கர தீ விபத்தில், அவரது 3 வயது பெண் குழந்தை மர்யம் கானெம் மட்டும் வீட்டின் ஒரு பகுதியில் தனியாகச் சிக்கிக் கொண்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், சிறுமி பயந்து கதறி அழுத சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையில் போராடி அந்தச் சிறுமியை மீட்டுள்ளனர்.
தீயில் சிக்கிப் படுகாயமடைந்த சிறுமி மர்யம் கானெம் தற்போது காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தீப்பிழம்புகளுக்கு நடுவே தாயை இழந்து, தனியாளாகச் சிறுமி மீட்கப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலக மக்களைக் கண் கலங்கச் செய்துள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டு காஸாவில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் தங்களின் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.