டிரம்ப்  
உலகம்

ராணுவ ரகசியம் கசிவு!.. 50 உயர் அதிகாரிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்திய அமெரிக்க அரசு

பத்திரிகையாளர்களுக்கு தகவல்களைக் கசியவிட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது .

ரகசியத் தகவல்கள் கசிந்த நிலையில் அமெரிக்க ராணுவத்தின் 50 உயர் அதிகாரிகளுக்கு டிரம்ப் அரசு உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ரகசிய தகவல்கள்

ஈரான் போரின் காரணமாக அமெரிக்க ராணுவத்திடம் ஏவுகணைகள் மற்றும் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் பணியாற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களிடம், பத்திரிகையாளர்களுக்கு தகவல்களைக் கசியவிட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

சோதனை

இந்த நிலையில் ரகசியத் தகவல்களைப் பத்திரிகையாளர்களுக்குக் கசியவிட்டது யார் என்பதைக் கண்டறிய, 50 உயர் அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உண்மை கண்டறியும் பாலிகிராப் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பென்டகனில் இந்த நடவடிக்கை அமெரிக்க ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இதுதவிர சமீபத்தில், Stars and Stripes என்ற ராணுவ செய்தித்தாளின் முதன்மை ஆசிரியர் எரிக் ஸ்லாவின் உட்பட மூன்று மூத்த பத்திரிகையாளர்களை பென்டகன் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.

இது குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல், "தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்கள் கசிவதை பென்டகன் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது" எனக் கூறினார்.

டிரம்ப் கோபம்

அமெரிக்காவிடம் ஆயுதக் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

"அமெரிக்கா மிக எளிதாக வெற்றி பெறக்கூடிய ஒரு போரில் நாம் தோற்க வேண்டும் என நினைக்கும் தேசத்துரோகிகளே இத்தகைய தவறான செய்திகளைப் பரப்புகின்றனர்.

அமெரிக்காவிடம் வரம்பற்ற ஆயுதக் கையிருப்பு உள்ளது. நாம் முன்பை விட அதிக அளவில் ஆயுதங்களை உற்பத்தி செய்து சேமித்து வருகிறோம்." என அவர் ஊடக பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT