ஈரான் போர் எங்களுக்கு சின்ன விஷயம் - அதிபர் டிரம்ப் அதிரடி

மிக குறைந்த அளவிலான பெரும்பான்மையை தக்கவைக்க முயற்சித்து வருகின்றனர்.
Donald Trump
Published on

மத்திய கிழக்குப் பகுதியில் பல மாதங்களாக அவ்வப்போது நடைபெறும் தாக்குதல்கள் 'போர்' அல்ல என்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியதை ஆதரித்து அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் போர் போன்ற மோதல் 'சின்ன விஷயம்' என்று குறிப்பிட்டார்.

ஜே.டி. வான்ஸ் தெரிவித்த கருத்துகள் குறித்து ஓவல் அலுவலகத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் தற்போது "அவ்வப்போது" மட்டுமே நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்க வரி செலுத்துவோருக்கு 37.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான செலவை ஏற்படுத்தியதும், 18 அமெரிக்க ராணுவ வீரர்களின் உயிரைப் பறித்ததுமான இந்த மோதலின் தீவிரத்தை அவர் குறைத்து மதிப்பிடுவது போல் பேசினார்.

ஈரான் போர் சின்ன விஷயம்:

"அவர் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் இதை ஒரு ராணுவ மோதல் என்றுதான் அழைப்பேன்; ஏனெனில் இது எங்களுக்கு ஒரு சிறிய விஷயம் (சின்ன விஷயம்) மட்டுமே. இது பெரிய விஷயமல்ல," என்றும் அதிபர் டிரம்ப் கூறினார்.

ஈரான் உடனான அமெரிக்காவின் மோதலை விவரிக்க 'போர்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதை வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் வான்ஸ் வியாழக்கிழமை நிராகரித்தார். அதேவேளையில், ஆறு மாதங்களாக நீடிக்கும் இந்த மோதல் நவம்பர் இடைக்கால தேர்தலுக்குள் முடிவுக்கு வருமா என்பது குறித்த கணிப்புகளை தவிர்க்கவும் அவர் முயன்றார்.

போர் என்று அழைக்கமாட்டேன்:

குறிப்பிடத்தக்க வகையில், இந்த தேர்தலில் குடியரசு கட்சியினர் நாடாளுமன்றத்தில் தங்கள் வசமுள்ள மிக குறைந்த அளவிலான பெரும்பான்மையை தக்கவைக்க முயற்சித்து வருகின்றனர்.

நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்பாகவே இந்த மோதல் முடிவுக்கு வருமா என்று வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டபோது, ​​"நான் இதை போர் என்று அழைக்கமாட்டேன். தற்போதைய நிலையில், தீவிரமான துப்பாக்கிச் சண்டை எதுவும் நடைபெறவில்லை," என்று வான்ஸ் கூறினார்.

வாரத்தின் தொடக்கத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் கூட்டாளியான குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையிலேயே வான்ஸின் இந்தக் கருத்து வெளியானது.

X

Maalai Malar
www.maalaimalar.com