பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தனது ராணுவ தொழில்நுட்பத்தை பகிர்வது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடன் தனது கவலையை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் நேற்று தொடங்கிய 13வது ஆசியான் கூட்டைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் வைத்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் பீட் ஹெக்செத்-ஐ மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், அமெரிக்கா- இந்தியா இடையே கடந்த ஆண்டு கோலாலம்பூரில் வைத்து கையெழுத்தான 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
இரு நாடுகளும் கொள்கை ரீதியாக பாதுகாப்பு ஒத்துழைப்பில் எவ்வாறு ஒன்றி செயல்படுவது என்ற பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வையை பகிர்ந்து கொண்டதாக அவர்களது சந்திப்பு குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த சந்திப்பில் பயங்கரவாதம் குறித்து இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது என்றும் பயங்கரவாதத்தை தொடர்நது நிதியளித்து ஆதரிப்பதில் பாகிஸ்தானின் பங்கு குறித்தும் பயங்கரவாதிகளுக்கு அந்நாடு அளிக்கும் அடைக்கலம் குறித்தும் அதனால் அந்நாடு பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார் .
இந்தியா இந்த விஷயத்தில் பூஜ்ய சகிப்பு தன்மை கொண்டது என்றும் கூடியுள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்க முன்வந்துள்ள ராணுவ உதவி மற்றும் பாகிஸ்தானின் எப்16 போர் விமானத்தை மேம்படுத்த அமெரிக்கா உதவ முன்வந்துள்ளது குறித்து ராஜ்நாத் சிங் கவலை தெரிவித்தார்.
அவரது கருத்துக்களை கேட்டறிந்த ஹெக்செத், எல்லை கடந்த பயங்கரவாதத்தை தடுக்க அமெரிக்கா என்றும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து சமூக வலைதளத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், 'அமெரிக்க அமைச்சருடனான பேச்சு சிறப்பாக அமைந்தது. இரு நாடுகளின் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு மற்றும் ராணுவ தளவாட உற்பத்தியில் ஒருங்கிணைப்பை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்தோம்' என கூறியுள்ளார்.
ஹெக்செத் வெளியிட்ட பதிவில், ‘இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடினோம். இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆராய்ந்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
நேற்று ஆசியான் கூட்டம் தொடங்கிய நிலையில் இன்று இதில் ராஜ்நாத் சிங் உரையாற்ற உள்ளார்.
ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர்களுடனும் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சின்ஜிரோ கொய்சுமியுடனான பேச்சுவார்த்தைக்கு பின் பேசிய ராஜ்நாத் சிங் அது ஆக்கப்பூர்வமாக இருந்ததாக குறிப்பிட்டார்.
2 மாதங்கள் முன் ஜப்பான் - இந்தியா இணைந்து கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.