

இந்த மாநாடு வரும் நவம்பர் 20 முதல் 22 வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அவுரங்கசீப் கான் கிச்சிக்கு இந்தியா அழைப்பு அனுப்பியுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எஸ்சிஓ அமைப்பில் உள்ள இந்தியா உட்பட மொத்தம் 10 உறுப்பு நாடுகளுக்கும் இந்த மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 மே மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அதற்குப் பிறகு, பாகிஸ்தான் அமைச்சர் ஒருவருக்கு இந்தியா அழைப்பு விடுப்பது இதுவே முதல்முறையாகும்.
ஒருவேளை அவுரங்கசீப் கான் கிச்சி இந்த மாநாட்டில் கலந்துகொண்டால், 2023 மே மாதம் கோவாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டிற்கு அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி வந்ததற்குப் பிறகு, இந்தியாவிற்கு வரும் முதல் மூத்த பாகிஸ்தான் அமைச்சர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 20 அன்று தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்ற எஸ்சிஓ தலைவர்கள் கூட்டத்தில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
'இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா தனது முதல் எஸ்சிஓ நாகரிகங்கள் உரையாடல் மாநாட்டை நடத்தவுள்ளது. இதில் பங்கேற்க அனைத்து எஸ்சிஓ நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்று ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.
இதே கூட்டத்தில் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் முன்னிலையில் பேசிய ராஜ்நாத் சிங், "பயங்கரவாதத்தை கையாள்வதில் இரட்டை நிலப்பாடு இருக்கக்கூடாது.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களுக்கும், புகலிடம் தருபவர்களுக்கும் எஸ்சிஓ அமைப்பில் இடம் இருக்கக்கூடாது. பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் கூட்டாக அழிக்கப்பட வேண்டும்" என்று மிகக் கடுமையான கருத்துக்களைப் பதிவு செய்தார்.
செப்டம்பர் 1 முதல் பாகிஸ்தான் இந்த அமைப்பின் சுழற்சி முறைத் தலைவர் பதவியை ஏற்றுள்ளது.
இதில் 10 உறுப்பு நாடுகள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, பெலாரஸ், ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா 2017-ல் முழுநேர உறுப்பினரானது.
உறுப்பு நாடுகளுக்கு இடையே கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதும், பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதும் இந்த டெல்லி மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.