உலகம்

5 நிமிட வீடியோ கால்..ரூ.36 லட்சம் செலவில் திருமணம்: 9 நாட்களில் விவாகரத்து கோரிய நபர்!

அவசரப்பட்டு எடுத்த முடிவால் அந்த நபர் தற்போது நீதிமன்றப் படிகளில் ஏறி வருகிறார்.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் 'கு'(வயது 32). இவரை திருமணம் செய்துகொள்ளக் கூறி அவரது பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால், அவர் உள்ளூர் திருமணத் தகவல் மையம் ஒன்றில் ரூ.2,700 செலுத்திப் பதிவு செய்துள்ளார். அங்கு அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று பெண்களும் இவரை நிராகரித்ததால், திருமணத் தகவல் மையம் வேறு மாகாணத்தில் இருந்து 2 நாட்களில் பெண் தேடித் தருவதாக உறுதியளித்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவரை அந்த திருமண தகவல் மையம் அறிமுகப்படுத்தியது. "பெண்ணிற்கு எவ்வித கடனோ, குற்றப் பின்னணியோ அல்லது கடுமையான நோய்களோ இல்லை; உடனடியாகத் திருமணம் செய்து கொண்டு வரத் தயார்" என அவரது சுயவிவரக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து, அந்தப் பெண்ணுடன் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே 'கு' வீடியோ காலில் பேசினார். நேரில் சந்திக்காமலும், பெண்ணின் குடும்பத்தாரோடு பேசாமலும், திருமணத் தகவல் மையத்தை முழுமையாக நம்பி திருமணத்திற்குச் சம்மதித்தார். பெண்ணின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட வரதட்சணை மற்றும் திருமணத் தகவல் மையத்திற்கு அளிக்கப்பட்ட கட்டணம் என மொத்தம் சுமார் ரூ.36 லட்சம் 'கு'வின் குடும்பத்தாரால் செலவிடப்பட்டது. திருமணப் பதிவு முடிந்து மணப்பெண் 'கு'வின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில், திருமணம் ஆன 9 நாட்களில், பெண்ணின் வங்கி விவரங்களைச் சரிபார்த்தபோது, அவருக்கு ரூ.13.9 லட்சம் கடன் இருப்பது தெரியவந்தது. பெண்ணின் மொபைல் பணப் பரிவர்த்தனைக் கணக்கில் வேறொரு பெயர் இருந்தது கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தனக்குக் கல்லீரல் நொதி பாதிப்பு இருப்பதாகவும், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றும் திருமணத்திற்குப் பின் அந்தப் பெண் கூறியுள்ளார்.

இந்த ஏமாற்றங்களால் அதிர்ச்சியடைந்த 'கு', திருமணம் நடந்த 9 நாட்களிலேயே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்.

ஆரம்பத்தில் விவாகரத்திற்குச் சம்மதித்த அந்தப் பெண், பின்னர் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறி 'கு' மீது வழக்குத் தொடர்ந்தார். அவர் தன்னை மேக்கப் போடச் சொல்லியும், வீட்டு வேலைகள் செய்யக் கட்டாயப்படுத்தியும் கொடுமைப்படுத்தியதாகக் கூறி ரூ.7 லட்சம் இழப்பீடு கோரியுள்ளார்.

மறுபுறம், ஏமாற்றிய திருமணத் தகவல் மையத்தின் மீது 'கு' வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆனால், "நாங்கள் பெண்ணை அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்து முடித்துவிட்டோம்; பணத்தை வாங்குவதற்காக இவர்களே நாடகமாடுகிறார்கள்" என முகமை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவசரப்பட்டு எடுத்த முடிவால் அந்த நபர் தற்போது நீதிமன்றப் படிகளில் ஏறி வருகிறார்.