ரஷியாவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் போது, மசூதிகளை விட நூலகம் கட்டுவதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் தெரிவித்துள்ளார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த நவம்பர் 26 தொடங்கி இன்று வரை ‘செயற்கை நுண்ணறிவு உலகத்திற்கான ஒரு பயணம்’ என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்தியா, கஜகஸ்தான் உள்பட 16 சர்வதேச நாடுகள் கலந்துகொண்டன; இந்தியா சார்பில் 16 வயதான ரவுல் ஜான் அஜூ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்முனைவோர் கலந்துகொண்டார்.
இதையடுத்து மாநாட்டில் கலந்துகொண்ட கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட், ஒரு காலத்தில் மசூதிகளை கட்டும் போக்கு இருந்தாகவும், ஆனால் தற்போது நாம் நூலகங்களை கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதால், அதனை தான் ஊக்குவிக்க விரும்புவதாக காசிம் கூறினார்.
மேலும் டிக்டாக் என்பது மனித மூளையை, குறிப்பாக இளைஞர்களின் மூளையை அழிக்கும் ஒரு கொடிய விஷயமாக உள்ளதாக காசிம் கூறினார்.
கஜகஸ்தான் கடந்த 1991 ஆம் ஆண்டு முன்னாள் சோவியத் யூனியன் இடமிருந்து (தற்போது ரஷியா) சுதந்திரம் பெற்றது. இந்த காலகட்டத்தில், கஜகஸ்தானில் 68 மசூதிகள் இருந்ததாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
கஜகஸ்தானில் ஜனவரி 2025 கணக்கின்படி, 2,888 மசூதிகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட, 54 சதவீதம் அதிகமாகும்.
மேலும் புதியதாக கட்டப்பட்ட மசூதிகளின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் (ரூ.1.5லட்சம் கோடி) இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் கஜகஸ்தானில் ஜனவரி 1, 2026 அன்று நிலவரப்படி, 3,912 பொது நூலகங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் முன்னதாக கஜகஸ்தானில் பேசிய அதிபர் காசிம், மசூதிகளுக்கு நிதியளிக்கும் வணிக உரிமையாளர்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மாணவர் தங்குமிடங்கள், நூலகங்கள் மற்றும் விளையாட்டு வசதிகளில் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.