உலகம்

6 பேருக்கு மரண தண்னை நிறைவேற்றிய ஜோர்டான்

மூத்த காவல்துறை அதிகாரியை கொலை செய்த குற்றத்திற்காக மற்றொருவர் தண்டிக்கப்பட்டார்.

பாதுகாப்பு படையினரை கொலை செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட ஆறு பேருக்கு ஜோர்டான் தூக்கு தண்டனை நிறைவேற்றியதாகவும், இதன் மூலம் மரண தண்டனை பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த ஒன்பது ஆண்டு கால தடை முடிவுக்கு வந்ததாகவும் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களின் உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் வழிவகுத்த "பயங்கரவாத மற்றும் குற்ற வழக்குகளில்" அந்த நபர்கள் தண்டிக்கப்பட்டிருந்தனர் என்று அரசாங்க செய்தி தொடர்பாளர் முகமது மொமானி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த நபர்களில் இருவர், 2018-ஆம் ஆண்டு சால்ட் நகரில் நடந்த ஒரு சோதனையின்போது ஆறு பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள். 2022-இல் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களின்போது ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை கொலை செய்த குற்றத்திற்காக மற்றொருவர் தண்டிக்கப்பட்டார்.

2014 முதல் 2018 வரை நடந்த ஆயுத மோதல்களின்போது பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்ட போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் மற்றவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஜோர்டானில் 100க்கும் மேற்பட்டோர் மரண தண்டனை கைதிகளாக உள்ளதாகவும், மரண தண்டனைகள் "ஒவ்வொருவராக" நிறைவேற்றப்படும் என்றும் மொமானி கூறினார்.

நாட்டை பாதுகாத்து உயிர்நீத்தவர்களுக்கு நீதி வழங்குவதற்காக இந்த தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக அவர் மேலும் கூறினார். ஜோர்டான் மரண தண்டனையை அரிதாகவே, முக்கியமாக பயங்கரவாதம் மற்றும் கடுமையான வன்முறை குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் மட்டுமே செயல்படுத்துகிறது. மேலும் 2017-ஆம் ஆண்டில் கடைசியாக 15 பேரை தூக்கிலிட்டது.