அமெரிக்க துணை அதிபர்  
உலகம்

ஈரான் போர் முடிவின்றி தொடர வேண்டும் என சதி.. இஸ்ரேல் மீது அமெரிக்க துணை அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

இஸ்ரேல் அரசாங்கத்திற்குள் இருக்கும் சில நபர்கள் தொடர்ந்து பின்னணியில் வேலை செய்து வருகிறார்கள்

ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளையும் அமைதி முயற்சிகளையும் முடக்க இஸ்ரேல் அரசாங்கத்திற்குள் இருக்கும் சில சக்திகள் தீவிரமாக முயன்று வருவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய கிழக்கு பகுதியில் போர் எப்போதும் தடையின்றி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றே இந்த இஸ்ரேலிய சக்திகள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாட்காஸ்ட் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜே.டி. வேன்ஸ், ஈரானுடனான சமாதான பேச்சுவார்த்தைகளில் இருந்து அமெரிக்காவை எப்படியாவது விலக்கி வைக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் அரசாங்கத்திற்குள் இருக்கும் சில நபர்கள் தொடர்ந்து பின்னணியில் வேலை செய்து வருகிறார்கள் என்று தனக்கு உறுதியாக தெரியும் என தெரிவித்தார்.

வெளிநாட்டு சக்திகள்

மேலும், "வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்களது சொந்த லாபத்திற்காகவும் நலன்களுக்காகவும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க முயல்வது உலக அரசியலில் சாதாரணமான ஒன்றுதான்.

ஆனால், அமெரிக்காவை வழிநடத்தும் தலைவர்கள் இத்தகைய வெளிப்புற அழுத்தங்களுக்கும் சதிகளுக்கும் எளிதாக அடிபணிந்து, நாட்டின் உரிமையை இழக்கும்போதுதான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

அமெரிக்கா எப்போதும் தனது சொந்த நலன்களின் அடிப்படையிலேயே தனித்து முடிவெடுக்க வேண்டும்" என்று பேசினார்.

தெளிவு

ஒட்டுமொத்த இஸ்ரேல் அரசாங்கமே பேச்சுவார்த்தைகளையும் அமைதியையும் எதிர்க்கிறது என்று தான் கூறவில்லை என்றும், அந்த அரசுக்குள் இருக்கும் சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே இத்தகைய முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துகிறார்கள் என்று வான்ஸ் தனது குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தார்.

மேலும், கடந்த காலங்களில் ஈரானுக்கு எதிராகக் கடுமையான ராணுவக் கட்டுப்பாடுகளையும் பொருளாதாரத் தடைகளையும் டிரம்ப் விதித்ததற்கு இஸ்ரேல் காரணம் அல்ல என்றும், அது முற்றிலும் அமெரிக்காவின் சொந்த முடிவு என்றும் வான்ஸ் அந்த போட்காஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

போர் - தாக்குதல்

வான்ஸ் கருத்து ஒருபுறமிருக்க, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

நேற்று ஈரானில் புற்றுநோய் பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெரும் மருத்துவமனை அருகே அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

மருத்துவமனையில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஹார்முஸ் வழியே ஈரான் நோக்கி சென்ற கப்பலை அமெரிக்கா தாக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை சிவப்பு கோடாக ஈரான் அறிவித்துள்ளது.