ஈரானில் குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனை அருகே அமெரிக்கா வான்வழி தாக்குதல் - 211 நோயாளிகள் வெளியேற்றம்

இந்த தாக்குதல் உயிருக்காக போராடும் அப்பாவி குழந்தைகளுக்கு எதிரான ஒரு போர்க்குற்றமாகும்.
Iran Cancer Hospital
Published on

ஈரானின் தென்மேற்கில் அமைந்துள்ள அஹ்வாஸூ பகுதியில் செயல்பட்டு வரும் புற்றுநோய் மருத்துவமனை அருகே அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் உட்பட 211 உள்நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள புற்றுநோய் சிறப்பு மையமான ஷாஹித் பகாயி மருத்துவமனைக்கு அருகே, அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது.

இந்த தாக்குதலை அடுத்து மருத்துவமனையில் இருந்த இருநூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனை சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஈரான் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஈரான் கண்டனம்:

இந்நிலையில் தாக்குதல் குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், “நேற்று இரவு ஷாஹித் பகாயி மருத்துவமனைக்கு அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலை அடுத்து, மருத்துவமனை காலி செய்யப்பட்டது.

சுகாதார மையங்களுக்கு எதிராக இஸ்ரேல் செய்யும் அட்டூழியங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கு கடுமையான கவலையையும் துன்பத்தையும் ஏற்படுத்தி, கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்த 211 நோயாளிகள் அவசரமாக வெளியேற்ற நிர்பந்திக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல் உயிருக்காக போராடும் அப்பாவி குழந்தைகளுக்கு எதிரான ஒரு போர்க்குற்றமாகும்.

மனித உரிமைகளை இடைவிடாமல் போதித்துவிட்டு, மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் குறிவைக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள், தங்களின் அறநெறி நம்பகத்தன்மை இழந்துவிட்டனர்” என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com