உலகம்

ஹூதிக்களுக்கு எதிராக ஒன்றுகூட சவுதியிடம் ஒப்புதல் கோரும் இஸ்ரேல் - மறுக்கும் பட்டத்து இளவரசர்!

இந்த விவகாரத்தில் அமெரிக்காவை மத்தியஸ்தராக நியமித்துள்ளது இஸ்ரேல்.

சமீப நாட்களாக சவுதி அரேபியாமீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள ஏமனின் ஹூதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஜெருசலேம் இணைவதற்கு, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சவுதியின் ஒப்புதலைக் கோரியுள்ளார்.

அமெரிக்கா மூலமாக நெதன்யாகு இந்த தூதை அனுப்பியதாக டெல் அவிவை தளமாகக் கொண்ட ஹாரெட்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் லாப கணக்கு

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் மூலம் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் இந்த முன்மொழிவு, இஸ்ரேலை இன்னும் ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்காத சவுதி அரேபியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறப்படுகிறது.

மேலும் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்குமே ஈரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினர் பொதுவான அச்சுறுத்தலாக விளங்குவதால், ராணுவக் கூட்டு பலன் தரும் என இஸ்ரேல் நம்புகிறது.

இஸ்ரேலின் கோரிக்கையை நிராகரிக்கும் சவுதி

ஆனால் இஸ்ரேலின் இந்த கோரிக்கையை சவுதி நிராகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுடன் இணைந்து ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், சவுதி அரேபிய பொதுமக்கள் மற்றும் ஒட்டுமொத்த வளைகுடா அரபு நாடுகளிடையே கடுமையான அரசியல் எதிர்ப்பும் அதிருப்தியும் உருவாகும் என அந்நாட்டின் பிரதமரும், பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் தயக்கம் காட்டி வருகிறார்.

மேலும் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு முறையான தீர்வு காணப்பட்டு, தனி பாலஸ்தீன நாடு அமைக்கப்படும் வரை இஸ்ரேலுடன் எந்தவொரு அதிகாரப்பூர்வ உறவோ அல்லது சுமுக உடன்படிக்கையோ சாத்தியமில்லை என்ற தனது வெளியுறவுக் கொள்கையில் சவுதி அரேபியா உறுதியாக உள்ளது.

மொத்தமாக ஹூதிகளின் அச்சுறுத்தலை சவுதி எதிர்கொண்டாலும், இஸ்ரேலுடன் கைகோர்ப்பது அரபு உலகில் தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், இஸ்ரேலின் கூட்டு ராணுவத் திட்டத்தை சவுதி முற்றிலும் புறக்கணித்துள்ளது.

SCROLL FOR NEXT