

சவுதியில் நிலவிவரும் போர்பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில்கொண்டு ரியாத், ஜித்தா, தம்மாம் மற்றும் மதீனா நகரங்களுக்கான விமானச் சேவைகளை அக்.17 வரை ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அவசர முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளது.
மேலும் பயணிகள் விமான நிலையங்களுக்கு செல்வதற்கு முன்பு, இணையத்தில் தங்களது விமான நிலையை சரிபார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. எந்தவொரு கேள்விகளுக்கும் அல்லது சந்தேகங்களுக்கும் உதவ எங்கள் குழுக்கள் தயாராக உள்ளன என தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவுப்பெற்ற ஏமனின் ஹூதி அமைப்பினர் சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சனிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளது.
இதனிடையே ஜித்தாவிற்கு அடுத்தபடியாக சவுதியின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில், “விமான நிலைய வசதிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை உறுதி செய்வதற்கான நடைமுறைகளை நிறைவு செய்ய அனுமதிக்கும் வகையில்" செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் சவுதிமீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது ஹூதி அமைப்பு. இதனால் அங்கு தொடர் பதற்றம் நிலவிவரும் நிலையில், அங்குள்ள முக்கிய நகரங்களுக்கான சேவையை நிறுத்துவதாக இண்டிகோ அறிவித்துள்ளது.