நேதன்யாகு, மோடி, டிரம்ப்  
உலகம்

இஸ்ரேலின் சக்திவாய்ந்த கூட்டாளி இந்தியா.. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த நேதன்யாகு

காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆயிரத்தை கடந்துள்ளது.

இஸ்ரேலின் வலிமைமிக்க கூட்டாளியாக இந்தியா உள்ளது என கூறி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கடந்த மாதம் பேசிய கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பதிலடி கொடுத்துள்ளார்.

வான்ஸ்

கடந்த மாதம் வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜே.டி. வான்ஸ், ஒருவேளை நான் இஸ்ரேல் அரசின் அமைச்சவரையில் இடம்பெற்றிருந்தால், உலகத்திலேயே அந்நாட்டுக்கு இருக்கும் ஒரே ஒரு சக்திவாய்ந்த கூட்டாளியை தாக்கி பேச மாட்டேன்" என கூறியிருந்தார்.

கடந்த மாதம் லெபனான் மீதான தாக்குதலில் ஏற்பட்ட முரண்பாடு உள்ளிட்டவற்றால் இஸ்ரேல் அமெரிக்காவை விமர்சிக்கும் தொனியை கைக்கொண்டதற்கு பதிலடியாக அவர் இதை கூறியிருந்தார்.

பதிலடி

இந்நிலையில் அண்மையில் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு,

ஜே.டி வான்ஸ்-ஐ நான் மதிக்கிறேன். எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது.

ஆனால் அதனால் மட்டும் அவர் சொல்லும் எல்லாவற்றிலும் நான் உடன்பட வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. அமெரிக்காவில் இதுவரை இருந்த அதிபர்களிலேயே டிரம்ப் தான் எங்களில் சிறந்த நண்பர். அதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் எங்களுக்கு வேறு சில நண்பர்களும் உள்ளனர். குறிப்பாக இந்தியா. அந்நாட்டில் 1.4 பில்லியன் மக்கள் உள்ளனர். அங்கு எங்களுக்கு பேராதரவு உள்ளது. குறிப்பாக நான் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துபவன். அதில் இந்தியாவில் இருந்து எனக்கு ஆதரவுகள் வந்து குவிகின்றன." என தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் தங்கள் மீதும் விமர்சனம் இருந்தாலும் இஸ்ரேலுக்கு இன்னும் பல நாடுகள் ஆதரவாகவே இருக்கின்றன. பல நாட்டு தலைவர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவும் அந்த பேட்டியில் நேதன்யாகு கூறியுள்ளார்.

சந்திப்பு

இதனிடையே டிரம்ப் நேட்டோ கூட்டத்தில் பங்கேறக் துருக்கி சென்று திரும்பியபின் அவரை சந்திக்க நேதன்யாகு நேரம் கேட்டுள்ளதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இனப்படுகொலை

2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் காசாவில் நிகழ்த்திய இனப்படுகொலையில் (ஐநாவால் அறிவிக்கப்பட்டது) தற்போதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் பாதி பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர் என ஐநா தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபரில் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் இஸ்ரேல் காசாவில் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. மேலும் காசாவுக்குள் செல்லும் உணவு மற்றும் உதவிப் பொருட்களை தடுத்து வைத்து மனிதனால் உருவாக்கப்பட்ட பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது இஸ்ரேல்.

இது காசா மக்களை தாமாக பட்டினியில் சாகடிக்கும் இனப்படுகொலை முயற்சி என ஐநா விசாரணை ஆணையம் குற்றம்சுமத்தியுள்ளது.

இந்த சூழலில் இந்தியா தங்களுக்கு பேராதரவு தருவதாவும் தங்களின் சக்திவாய்ந்த கூட்டாளி எனவும் நேதன்யாகு பேசியுள்ளது கவனிக்கத்தக்கது.